தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல கோடி சரிவு.. காந்தி ஜெயந்தி முதல் நாளில் பெரிய ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்திக்கு முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் களைகட்டும்..மதுப்பிரியர்கள் அளவுக்கு அதிகமாக மதுபானங்களை வாங்கி வைத்து அடுத்த நாளையும் மதுவுடன் கழிப்பார்கள். அந்த வகையில் எப்போதும் காந்தி ஜெயந்திக்கு முதல் நாள் மதுபான விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பெரிய அளவில் சரிந்துள்ளது. மதுவிற்பனை 30 கோடி அளவிற்கு சரிந்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 5,329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வந்தன. அப்போது சுமார் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் 4829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. இவை எல்லாம் தனியார் பார்கள், மனமகிழ் மன்றங்களும் அதிக அளவில் உள்ளன.

முன்னதாக கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாட்டில் தனியார்வசம் இருந்த மதுபான சில்லறை விற்பனையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தன் வசம் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து மது விற்பனை மூலம் அரசுக்கு வரும் வருமானம் என்பது தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்தது. 2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி வருவாய் வந்துள்ளது. ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில்,அதாவது 2008-2009ஆம் ஆண்டில் இந்த வருமானம் 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது.
ஆனால் அதற்கு அடுத்து வெறும் நான்கே ஆண்டுகளில் (2012-2013) 20 ஆயிரம் கோடி வருவாயை டாஸ்மாக் நிர்வாகம் ஈட்டியது. அதற்கு அடுத்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2018-19ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடியை கடந்தது டாஸ்மாக் வருமானம் . இதனிடையே 2022-2023ஆம் நிதியாண்டில் 40 ஆயிரம் கோடியை கடந்திருக்கிறது. 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இது 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசின் நிதித்துறை செயலாளர் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது கூறியிருந்தார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.250 கோடியை தாண்டி மது விற்பனை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், காந்தி ஜெயந்தி,வள்ளலார் தினம், திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதற்கு முந்தைய நாட்களில் மதுவிற்பனை களைகட்டும்.
அந்த வகையில் காந்தி ஜெயந்தியான நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.. இதனால் நேற்று முன்தினம் மது விற்பனை அதிகமாக இருக்கும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அன்றைய தினம் ரூ.200 கோடி அளவுக்கே மது விற்பனையாகி உள்ளதாம். ஆனால் கடந்த ஆண்டு இதே அக்டோபர் 1-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை ஆகி இருந்தது என்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போதும் ரூ.30 கோடி அளவுக்கு விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டு முதன்முறையாக மது விற்பனை குறைந்து வருவதாக அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகவே கூறி வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை குறைவுக்கு போலீசாரின் தீவிரமான வாகன சோதனையும் முக்கிய காரணம் என்கிறார்கள்.
இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது என்பது சென்னை, மதுரை , கோவை உள்பட பல்வேறு நகரங்களில் மிகவும் கடினமான காரியம் என்பதால், மதுவிற்பனை சரிந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்வது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் மதுவிற்பனை குறைய காரணம் என்கிறார்கள்.. அதே போல் மதுவை விட இப்போது சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு மாறிவிட்டதும் மதுபானங்கள் விற்பனை சரிவுக்கு காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications