இவிஎம் பற்றிய முழு டேட்டாவை தந்த பாலாஜி! ‘ஹேக்’ எப்படி நடக்கிறது ? ஆதாரம் இதோ!
சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எப்படி ஹேக் செய்யலாம் என்பது பற்றி மிகத் தெளிவாக சில விளக்கங்களை முன்வைத்துள்ளார் திருப்போரூர் விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி.
நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிரான அலை வீசிவருகிறது. இந்த மிஷின் மூலம் பாஜக தில்லுமுல்லு செய்துதான் வெற்றிபெறுகிறது.

அத்துடன் இந்த இவிஎம் மிஷினை தயாரிக்கும் பெல் நிறுவனத்தில் பாஜகவினர் 4 பேர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, 2024 மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்த இவிஎம் ஓட்டுப் பதிவுடன் விவிபேட் சேர்க்கப்பட்டு, அதன் மூலம்தான் தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறி விசிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜியிடம் இவிஎம் முறையில் நடத்தப்படும் தேர்தலில் எப்படி முறைகேடு நடக்கும் என்பதை விளக்கும்படி கேட்டோம். அவர் பல தகவல்களைத் தெரிவித்தார்.

"இந்த இவிஎம் மிஷினை முதன்முதலாக 1977இல் வடிவமைத்தார்கள். அதன்பிறகு 1980இல் செயல்படுத்தி காட்டுகிறார்கள். இது எப்படி இயங்கும்? வேலை செய்யும் என்று அப்போதுதான் விளக்கினார்கள்.
அப்போது எல்லாம் வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடைபெற்று வந்தது. அப்படி நடத்தும்போதும் மொத்த வாக்குகளை எண்ணி முடிப்பதற்கு 2 நாள்கள் ஆகும். அல்லது 4 நாள்கள் கூட ஆகும். அதுவரை காத்திருக்கவேண்டும்.
இவ்வளவு மனித உழைப்பும் அதிகப்படியான நேரமும் செலவாவதைக் குறைப்பதற்காகத்தான் இந்த இவிஎம் மிஷினை அரசியல் கட்சிகளிடம் முறையாக அறிமுகப்படுத்தி விளக்கம் அளித்தார்கள்.
அதன்பிறகு கேரளாவில்தான் அதை நடைமுறைப்படுத்தினார்கள். அப்படிச் செய்யும் போது அங்குள்ள 86 வாக்குச்சாவடிகளில் 50க்கு மட்டும் இந்த இவிஎம் மிஷின் வைத்தார்கள்.

அதன்மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. அப்போதே அது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவுசெய்யப்படுகிறது. அந்த வழக்கின் தீர்ப்பில் 50 வாக்குச்சாவடிகளில் இவிஎம் மிஷின் மூலம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பில் மிக முக்கியமாக நீதிமன்றம் ஒன்றைச் சுட்டிக்காட்டியது. நாம் வாக்கு செலுத்திய பிறகு, அது யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆகவே அந்த முறை சரியானது இல்லை என்றது.
அதன்பிறகு அரசியல் சட்டத்தில் ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவருகிறார்கள். இந்த இவிஎம் மிஷினை பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை அந்தச் சட்டத்திருத்தம் வழங்கியது.

இப்போது நாங்கள் விசிக சார்பாக என்ன கோரிக்கை வைக்கிறோம் என்றால், இவிஎம் மிஷினை வைத்தால் அதன் கூடவே விவி பேட் வைக்கவேண்டும். அதன் அடிப்படையில் வாக்குகளை எண்ண வேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஆனால், இந்த இவிஎம் முறையே வேண்டாம் என்று அன்றைக்கு வாதாடினார் ஜெயலலிதா. அரசியல் சட்டம் 61 என்ற பிரிவே தவறு என்று அவர் கூறினார். அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே அதை எடுக்க வேண்டும் என்றார்.

அதன்பின்னர் 2001இல் ஒரு வழக்குப் போடப்பட்டது. அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு அப்புறம் படிப்படியாக இவிஎம் செயல்பாட்டுக்கு வந்தது. 2004இல் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அப்போதும் பிரச்சினை அடங்கவில்லை. சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்குப் போட்டார். ஒருவருக்கு வாக்கு செலுத்துகிறோம். உடனே அந்தச் சின்னத்தில் விளக்கு எரிகிறது. விளக்கு எரிந்தால் போதுமா? அது நாம் போட்டவருக்குத்தான் போய்ச் சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்த வேண்டாமா என்றார் அவர்.
அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன சொன்னது என்றால். இவிஎம் மிஷினுடன் இணைப்பாக விழுகின்ற ஓட்டுக்களை உறுதி செய்ய விவி பேட் பயன்படுத்த வேண்டும் என்றது.

விவிபேட் என்றால் Voter-verified paper audit trail என்று பொருள். அதைதான் பலரும் பயன்படுத்தச் சொல்லிக் கேட்கிறோம்.
ஆனால், மாதவ் தேஷ்பாண்டே என்பவர் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அவர் அரசியல்வாதி இல்லை. சமூக ஆர்வலர் இல்லை. பல தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகித்தவர்.
அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆலோசகராகக் கூட அவர் இருந்துள்ளார். அவர் சமீபத்தில் இந்த இவிஎம் மிஷின் முறையில் ஓட்டுப் போடுவது குறித்து ஒரு பேட்டி அளித்திருந்தார்.
நாம் ஓட்டுப்போடுகிறோம். போட்ட சின்னத்தில் உள்ள விளக்கு எரிகிறது. அதன்பின்னர் விவிபேட் மூலம் போட்ட சின்னத்தில் பதிவாகிறது என்று ரசீதும் வருகிறது. அதை உறுதி செய்துவிட்டு வந்துவிடுகிறோம்.

அப்படி வந்தாலும் அது நாம் போட்ட சின்னத்திற்குத்தான் போய்ச் சேர்ந்துள்ளது என்பது உறுதியாக நம்ப முடியாது. ஏனென்றால் அந்த ஓட்டை வேறு சின்னத்திற்கும் மாற்ற முடியும் என்று தேஷ்பாண்டே சொல்லி இருக்கிறார்.
சிலர் கேட்கிறார்கள். இவிஎம் மிஷின் தவறு என்றால் நீங்கள் எப்படி வெற்றிபெற்றுவர முடியும் என்று? தமிழ்நாட்டில் இந்த இவிஎம் மிஷின் பற்றி மட்டும் இல்லை, தேர்தல் நடைமுறை குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ளது. ஆனால், வடநாட்டில் அப்படி இல்லை. அதனால்தான் தென்மாநிலங்களைவிட பாஜக வட இந்தியாவில் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறது" என்கிறார்












Click it and Unblock the Notifications