ஒரு போன் கால்! மருத்துவமனையிலிருந்தே "சாதித்த" ஓபிஎஸ்! ஏமாற்றத்துடன் திரும்பிய இபிஎஸ்.. பரபர பின்னணி
சென்னை: டெல்லி சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடியும் அமித்ஷாவும் நேரம் ஒதுக்காதது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எந்த விஷயமாக இருந்தாலும் டெல்லி மேலிடத்தை கேட்காமல் செய்ததே இல்லை என்ற ஒரு பேச்சு அதிமுக மேல் இருக்கிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது, சசிகலாவை சேர்ப்பது குறித்த விவகாரங்களில் டெல்லி மேலிடம்தான் தலையிட்டு முடிவு எடுத்ததாகவும் சொல்லப்பட்டது.
பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால்தான் துணை முதல்வராக பொறுப்பேற்க ஒப்புக் கொண்டேன். மற்றபடி எனக்கு பதவி மீது ஆசையில்லை என அண்மையில் ஓபிஎஸ் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் உள்கட்சி பிரச்சினை எழுந்த போது டெல்லி மேலிடத்தின் உதவியை ஓபிஎஸ் நாடினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. எனினும் அவர் பாஜக மூத்த அமைச்சர்களை சந்தித்து தனது மனக்குமுறல்களை கொட்டிவிட்டு வந்தார். எனினும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

முயற்சிகள்
இதை தடுக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு ஓபிஎஸ் தோல்வியையே கண்டார். இதனால் அதிமுக தலைமை இடத்தை கைப்பற்ற துடித்த அவருக்கு ஏமாற்றமே விஞ்சியது. அதிமுக வங்கிக் கணக்கை முடக்கிவைக்க நினைத்ததிலும் பெருந்தோல்வி ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்து வங்கிக் கணக்கை இயக்கும் உரிமை எடப்பாடி தரப்புக்கு கிடைத்தது.

மனவேதனை
இதனால் மனவேதனையில் உள்ள ஓபிஎஸ் சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அவருக்கு முன்பு முந்திக் கொள்ள நினைத்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி , பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்க முயற்சித்ததாக சொல்லப்பட்டது.

நேரம் கொடுக்கவில்லை
ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமரையும் அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராகி முதல் டெல்லி பயணமே இப்படி தோல்வியில் முடிந்ததால் நாளை மறுதினம் திட்டமிட்டிருந்த சென்னை வருகையை இன்று மாற்றியமைத்தார். கடந்த முறை சென்னை வந்த போது விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் மோடி தட்டிக் கொடுத்து பேசிய நிலையில் தற்போது அவருக்கு நேரம் ஒதுக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்தது என்ன
இதுகுறித்து தகவலறிந்த டெல்லி வட்டாரங்கள் கூறுகையில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்ஸை டெல்லி மேலிடம் போன் போட்டு நலம் விசாரித்தது என்கிறார்கள். ஆக டெல்லி மேலிடத்தின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்குத்தான் என்பது இதன் மூலம் தெரிகிறது. இதனால்தான் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்காமல் இருந்திருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். டெல்லி சென்று டெல்லி மேலிடத்தின் ஆதரவை பெற நினைத்தார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஓபிஎஸ் அதை முறியடித்து சாதித்துவிட்டார் என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications