இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காதது ஏன்? சௌமியா அன்புமணி பரபரப்பு விளக்கம்
சென்னை: நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கட்டாயம் வென்று தனது கட்சிக்கு உள்ள செல்வாக்கை காட்ட வேண்டிய நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், பாமக அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்து உள்ளது. பாமக ஏன் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற கேள்விக்கு சவுமியா சௌமியா அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தொகுதியில் ஆளும் தவெக எதிர்க்கசிட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட்கள் வேட்பாளரை நிறுத்தியுள்ளன. இதனால் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காதது ஏன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால், பாமக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியது. இரண்டு தொகுதிகளிலும் கட்டாயம் வென்று தனது கட்சிக்கு உள்ள செல்வாக்கை காட்ட வேண்டிய நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், பாமக ஆதரவை அவர் பெரிதும் எதிர்பார்த்து இருந்தார்.
ஆனால், இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு அளிக்காதது என்று அன்புமணி அறிவித்தது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மதுராந்தகத்தில் வன்னியர் சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள நிலையில், அந்த தொகுதியில், பாமக யாருக்கு ஆதரவு கிடைக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. இந்த சூழலில்தான், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுமியா அன்புமணி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சவுமியா அன்புமணி விளக்கம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது, கொடுக்கக் கூடாது என்பது கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணியில் பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் பாமக பிரசாரமே செய்து இருப்போம்" என்றார்.
முன்னதாக இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாகவும் அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், இதனை சவுமியா அன்புமணி திட்டவட்டமாக மறுத்தார்.
விசிக எதிர்ப்பு
பாமகவை தவெக கூட்டணியில் சேர்க்க விசிகவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. தவெக அமைச்சரவையில் பாமக இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று விசிக திட்டவட்டமாக கூறியிருந்தது. இதனால், பாமகவை அமைச்சரவையில் இணைக்கும் திட்டத்தை தவெக தற்போதைக்கு கையில் எடுக்காது என்றே சொல்லப்படுகிறது. எனினும், இடைத்தேர்தல் முடிவுகளை வைத்தே தமிழக அரசியல் களத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
