தர்மேந்திர பிரதான் ராஜினாமா இருக்கட்டும், கருணாநிதி கொடுத்த சமூக நீதி பறிபோய் விட்டதே!
சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராக நாடு முழுக்க மாணவர்கள் நடத்திய போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, டெல்லியின் ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி, மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, தொடர் போராட்டங்களின் அழுத்தத்தால் மத்திய அமைச்சர் தனது பதவியை விலகியுள்ளார். வடமாநில மாணவர்கள் இதனைத் தங்கள் போராட்டத்தின் இறுதி வெற்றியாகக் கருதி முழக்கமிட்டு வரும் அதே வேளையில், தென்னகத்தில்.. குறிப்பாகத் தமிழ்நாட்டில்.. போராட்டக் களம் முற்றிலும் வேறுபட்ட ஒரு பரிமாணத்தை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு தனிநபரின் ராஜினாமாவோ அல்லது ஒரு நிர்வாக மாற்றமோ மருத்துவ கல்வி அமைப்பில் நிலவும் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகிவிடாது. அமைச்சரின் விலகல் அல்ல, நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வதே ஒரே தீர்வு எனத் தமிழ்நாட்டின் மாணவர்களும், கல்வியாளர்களும், அரசியல் களமும் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்து வருகின்றன.
ஒருவரின் ராஜினாமா தீர்வாகுமா?
டெல்லியில் சிஜேபி அமைப்பு நடத்திய தீவிரமான போராட்டங்கள் அகில இந்திய அளவில் கல்வி முறைகேடுகளுக்கு எதிரான கவனத்தை ஈர்த்தது உண்மைதான். ஆனால், அந்த அமைப்பும், மாணவர்களும் ஒரு தனிநபரின் பதவி விலகலோடு தங்கள் இலக்கு முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர்.
ஒரு அமைச்சரை மாற்றுவதாலோ அல்லது தேசியத் தேர்வு முகமையின் தலைவரை மாற்றுவதாலோ நீட் தேர்வு முறையினால் ஏற்படும் முறைகேடுகளையும், வினாத்தாள் கசிவுகளையும், மருத்துவ துறையில் இருக்கும் சீர்கேடுகளையும் தடுத்துவிட முடியாது என்பதைத் தமிழ்நாடு உணர்ந்துள்ளது.
நீட் தேர்வு முறையிலேயே பெருமளவிலான முறைகேடுகளும், சமத்துவமின்மையும் இருக்கும் போது, வெறும் அமைச்சர்களை மாற்றுவது எந்த மாற்றத்தையும் தந்துவிடாது. இதனால்தான், டெல்லியில் கொண்டாட்டங்கள் நடக்கும் அதே நேரத்தில், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட அலை மேலும் தீவிரமடைந்துள்ளது.
சர்வதேச அளவில் மிளிரும் தமிழ்நாடு
தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்ப்பதற்கு மிக முக்கியக் காரணம், இங்குள்ள தனித்துவமான மற்றும் சர்வதேசத் தரம் வாய்ந்த மருத்துவக் கட்டமைப்பு ஆகும். இந்தியாவில் பொதுச் சுகாதாரத் துறையிலும் மருத்துவக் கல்வியிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் சிகிச்சைக்காகத் தேடிவரும் மருத்துவச் சுற்றுலாவின் தலைநகரமாக சென்னை விளங்குகிறது. மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், கிராமப்புறங்கள் வரை பரந்து விரிந்துள்ள சுகாதார நிலையங்கள் எனத் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.
நாட்டின் சிறந்த மருத்துவர்கள் பலரை உருவாக்கிய பெருமை தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்டத்திற்கும், அதன் கல்வி முறைக்கும் உண்டு.
2006-ல் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமூக நீதிப் புரட்சி
தமிழ்நாட்டின் இந்த மருத்துவ வளர்ச்சிக்கு வித்திட்டது 2006 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், மருத்துவ மற்றும் தொழில்முறைக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கை நடைபெறும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நுழைவுத் தேர்வு என்ற பெயரில் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்ட நிலையை இந்த முடிவு உடைத்தெறிந்தது.
லட்சக்கணக்கில் பணம் செலவழித்துத் தனியாகப் பயிற்சி பெற முடியாத ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதன்முறையாகப் பெருமளவில் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழையத் தொடங்கினர். சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகளைத் தகர்த்து, அனைவருக்குமான சமூக நீதியை நிலைநாட்டிய பெருமை இந்த 2006 சட்டத்திற்கு உண்டு.
நீட் தேர்வு கொண்டுவந்த சீரழிவும் வணிகமயமும்
ஆனால், மத்தியில் பாஜக மற்றும் மாநிலத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்ட 'நீட்' நுழைவுத் தேர்வு, இந்தச் சமூக நீதிப் பாதையை முற்றிலுமாகச் சிதைத்தது. நீட் தேர்வு என்பது மாணவர்களின் உண்மையான அறிவையோ அல்லது மருத்துவத்திற்கான தகுதியையோ அளவிடுவதில்லை.. மாறாக, அது பயிற்சி மையங்களின்பிடியில் இயங்கும் ஒரு வணிகக் கலாச்சாரத்தையே உருவாக்கியது.
ஒரு ஏழை அல்லது கிராமப்புற மாணவரால் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி 'கோச்சிங் சென்டர்களில்' படிக்க முடியாது.
பல ஆண்டுகள் பள்ளிக் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் மீண்டும் பயிற்சி எடுத்துத் தேர்வு எழுத பணபலமும் பொருளாதாரப் பின்புலமும் தேவைப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வசதியுள்ள மேல்தட்டு வகுப்பினருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியம் என்ற நிலையை நீட் உருவாக்கியுள்ளது. இது ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை அடியோடு சிதைத்துள்ளது.
தமிழ்நாட்டின் ஒரே இலக்கு: நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்
இக்காரணங்களினால்தான், தமிழ்நாடு ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. மத்திய அமைச்சரின் ராஜினாமா என்பது ஒரு தற்காலிகமான அரசியல் நகர்வே தவிர, மாணவர்களின் எதிர்காலத்திற்கான நிரந்தரத் தீர்வு அல்ல.
மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும், கிராமப்புற மாணவர்களின் கனவுகளைப் பலிவாங்கும் நீட் தேர்வு இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான பழைய சேர்க்கை முறையே மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடரும் போராட்டம்!
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் கோரிக்கையும் போராட்டக் களமும் முற்றிலும் வேறுபட்டவை. வெறும் ஒரு நபர் மாறினால் முழு நிர்வாகக் கட்டமைப்பிலும் நீதி வந்துவிடாது என்பதில் தமிழ்நாடு மிகத் தெளிவாக உள்ளது. தமிழ்நாடு கோருவது ஒரு அமைச்சரின் பதவி விலகலை மட்டுமல்ல, மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் நுழைவுத் தேர்வை ஒட்டுமொதாகத் தடை செய்ய வேண்டும் என்ற உறுதியான முடிவையே!
டெல்லி அமைப்புகளின் போராட்டம் அமைச்சரின் பதவியோடு முடிந்துவிடலாம்.. ஆனால் தமிழ்நாட்டின் போராட்டம் நீட் தேர்வு முற்றிலும் தடைசெய்யப்படும் வரை ஓயாது! இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் இன்னமும் வீரியம் குறையாமல் பல இடங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன. அமைச்சரின் ராஜினாமா அல்ல மொத்தமாக நீட் தேர்வு ரத்தாகும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி போராடி வருகின்றனர். இது வெறும் தேர்வுக்கான போராட்டம் அல்ல, மாநில உரிமைக்கும் சமூக நீதிக்குமான அறப்போர்!


Click it and Unblock the Notifications
