இது சாதாரண மோதல் அல்ல, உங்கள் வாக்குரிமைக்கே ஆபத்து! தேர்தல் ஆணையத்தில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கு இருக்கும் ஆகப்பெரிய ஆயுதம் அவனுடைய 'வாக்குரிமை' மட்டுமே. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியாளர்களை மாற்றவும், தங்கள் உரிமைகளைக் கேட்கவும் வாக்களிக்கும் உரிமையே அடிப்படை. ஆனால், அந்த வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடக்கும் விவகாரங்கள், நாட்டின் ஜனநாயகத்தின் மீதே பெரும் கேள்வியை எழுப்பியுள்ளன.

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்ட அதிரடி புலனாய்வு அறிக்கை, தேர்தல் ஆணையத்தின் மோதலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.

eci controversy

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினட் செயலாளருக்கு இவர்கள் அனுப்பிய 14 கடிதங்களை ஆய்வு செய்ததில் இந்த மோதல் அம்பலமாகி உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களில் இருவர், கடந்த 10 மாதங்களில் 14 முறை தங்கள் எதிர்ப்புகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இது ஏதோ அரசு அலுவலகத்தில் நடக்கும் சாதாரண அதிகாரப் போட்டி அல்ல.. நாட்டில் யார் வாக்களிக்கலாம், யாருடைய வாக்கு நீக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறைகளில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்கள்.

சாமானிய மனிதனை இது எப்படிப் பாதிக்கிறது?

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (SIR) மட்டும் சுமார் 13 கோடிப் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் தகுதியான பல வாக்காளர்களின் பெயர்களும் அமைதியாகக் களையெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சமே இச்சிக்கலின் மையப்புள்ளி ஆகும்.

சாமானியர்களைப் பாதிக்கும் மூன்று முக்கியக் காரணங்கள்:

1. புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் சிக்கல்:

ஒரு இளைஞர் அல்லது பொதுமகன் முதல்முறையாக வாக்காளர் அட்டையைப் பெற 'பாரம் 6' (Form 6) விண்ணப்பத்தை நிரப்புகிறார். ஆனால், "உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்தார்களா?" என்ற தேவையற்ற ஒரு புதிய கேள்வியை அனுமதி இன்றி மென்பொருளில் சேர்த்துள்ளனர். இதற்கு ஆணையர்களே எதிர்ப்பு தெரிவித்தும் அதை நீக்கவில்லை. இதன் விளைவாக, சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த எளிய இளைஞர்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்வதே தடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

2. உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரம் பறிப்பு:

பொதுவாக ஒரு பகுதியில் உள்ள வட்டாட்சியர் அல்லது வருவாய்க் கோட்டாட்சியர் (ERO) போன்ற உள்ளூர் அதிகாரிகள்தான் களத்தில் இறங்கி வாக்காளர்களைச் சரிபார்ப்பார்கள். ஆனால், அந்த அதிகாரிகளின் கணினி அனுமதியைக் குறைத்துவிட்டு, ஒட்டுமொத்த வாக்காளர் விவரங்களையும் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். உள்ளூர் உண்மை நிலை தெரியாமல், டெல்லியில் உள்ள ஒரு கணினி மென்பொருள் பட்டனைத் தட்டி ஆயிரக்கணக்கான சாமானியர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய முடியும் என்ற நிலை உருவானது.

3. தகுதி இருந்தும் மறுக்கப்பட்ட வாக்குரிமை:

உதாரணமாக, கோவா மாநிலத்தில் 97 வாக்காளர்களுக்கு எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும், தலைமை அலுவலக மென்பொருளில் அதற்கான அனுமதி வழங்கப்படாததால், அவர்களுடைய பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டுப்போயின. 97 பேர் என்பது சிறிய எண்ணிக்கையாகத் தோன்றலாம்; ஆனால் ஆவணங்கள் சரியாக இருந்தும் ஒரு குடிமகனின் வாக்குரிமை மென்பொருள் குளறுபடியால் பறிபோகிறது என்றால், அது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

சட்டம் என்ன சொல்கிறது? ஏன் இது பெரும் அச்சுறுத்தல்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூவருக்கும் சமமான அதிகாரமே உண்டு. 2023 ஆம் ஆண்டு சட்ட விதிகளின்படி, ஆணையத்தின் அனைத்து முக்கிய முடிவுகளும் மூவரின் ஒருமனதான ஆதரவோடு அல்லது பெரும்பான்மை முடிவின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும் தெரியாமலேயே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேர்தல் ஆணைய வட்டாரங்கள் இந்த முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டன என்று விளக்கம் அளித்தாலும், இரண்டு ஆணையர்கள் அமைச்சரவைச் செயலாளருக்கே கடிதம் எழுதும் அளவுக்குச் சென்றிருப்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

தேர்தல் நேர்மையாக நடந்தால்தான் மக்களின் உண்மையான குரல் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும். அந்தத் தேர்தலை நடத்தும் அமைப்பிலேயே பெரும்பான்மை ஆணையர்களின் வார்த்தைகள் மதிக்கப்படாமல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்ற தகவல் வெளியாகி இருப்பது, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை வேரையே உலுக்கியுள்ளது. வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடையாளம்; அதைத் தீர்மானிக்கும் இடத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போவது சாமானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை மணி ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+