கரூர் கேசில் ரொம்ப எதிர்த்தீங்களே விஜய்.. இப்போ அதே அஸ்ராவிற்கு உளவுத்துறை உச்ச பதவி! என்னங்க இது?
சென்னை: தமிழக அரசியலில் நேற்று ஒரு அதிரடி உத்தரவு வெளியானது. தமிழக காவல் துறையின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்ரா கார்க்கிற்கு, உளவுத்துறையின் மிக முக்கியமான கூடுதல் பொறுப்பு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அவருக்கு, இப்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்திலான முழு அதிகாரமும் கைக்கு வந்துள்ளது.
ஆனால், இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய விவாதம் கிளம்பியுள்ளது. காரணம், சில மாதங்களுக்கு முன்பு இதே அஸ்ரா கார்க் மீது தவெக தரப்பு வைத்த விமர்சனங்களும், இன்று அதே தவெக அரசு அவருக்கு வழங்கியிருக்கும் உச்சபட்ச அதிகாரமும்தான்.

கரூர் சம்பவமும்... தவெகவின் கடுமையான எதிர்ப்பும்
கடந்த ஆண்டு கரூரில் விஜய் கலந்துகொண்ட தவெக பிரச்சாரக் கூட்டத்தில்.. விஜய் தாமதமாக வந்த காரணத்தால் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெரும் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, அதற்குத் தலைமை தாங்க ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க்கை நியமித்தது.
அப்போது எதிர்க்களத்தில் இருந்த தவெக மற்றும் அதன் ஆதரவாளர்கள் இந்த நியமனத்தைக் கடுமையாக எதிர்த்தனர். "அஸ்ரா கார்க் முந்தைய திமுக அரசுக்கு நெருக்கமான அதிகாரி.. அவர் நியமிக்கப்பட்டால் தவெக நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நோக்கில் ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்துவார்" என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை அவர் விசாரிக்கக் கூடாது என்று சட்ட ரீதியான எதிர்ப்புகளும், அரசியல் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
ஆட்சிக்கு வந்ததும் தலைகீழாக மாறிய நிலைப்பாடு
காலம் மாறியது. தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு காவல்துறை நிர்வாகத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால், தவெக தரப்பால் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்ட அதே அஸ்ரா கார்க், சில மாதங்களுக்கு முன்பே மாநில உளவுத்துறையின் தலைவராக (IG Intelligence) நியமிக்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல், தற்போது உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி பொறுப்பையும் முழுமையாக அவரிடமே ஒப்படைத்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த உளவு அமைப்பின் முழு அதிகாரத்தையும் அவர் கையில் அரசு கொடுத்துள்ளது.
சாமானிய மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள்
இந்த உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் சில எளிய கேள்விகளை எழுப்புகின்றனர்:
1. அன்று வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
அரசியல் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் "இவர் திமுகவின் விசுவாசி, நேர்மையான விசாரணை நடக்காது" என்று தவெக தரப்பு அடுக்கடுக்காகப் பேசியது உண்மைதானா அல்லது வெறும் தேர்தல் அரசியலா?
2. அரசியல் முரண்பாட்டின் உச்சம்:
எந்த அதிகாரியின் விசாரணையைக் கண்டு தவெக தலைமை தயங்கியதோ, அதே அதிகாரியிடம் ஒட்டுமொத்த மாநிலத்தின் உளவுத் தகவல்களையும் ரகசிய அறிக்கைகளையும் சேகரிக்கும் இலாக்காவை ஒப்படைத்திருப்பது நியாயமா?
3. திட்டமிட்ட நிர்வாக முடிவா? அல்லது நிர்பந்தமா?
அஸ்ரா கார்க் தனது பணிக்காலத்தில் நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதில் கண்டிப்பான, திறமையான அதிகாரியாகப் பெயர் பெற்றவர். ஆனால், அவரை எதிர்த்த தவெக, இப்போது அவரது அனுபவத்தை மட்டும் பார்க்கிறதா அல்லது அதிகார மையத்தில் நிலவும் குழப்பத்தின் வெளிப்பாடா என்ற குழப்பம் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
அதிகார வட்டாரத்தின் பார்வை
ஒருபுறம் அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், காவல் துறை வட்டாரத்தில் இது ஒரு வழக்கமான நிர்வாக நடைமுறை என்றே கூறப்படுகிறது. உளவுத்துறை போன்ற முக்கியமான துறைக்குக் கடுமையான, அனுபவம் வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியே தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், அன்று கரூரில் அஸ்ரா கார்க்கின் வருகையை எதிர்த்துப் போராடிய தொண்டர்கள், இன்று தங்களது சொந்த அரசே அவருக்கு கூடுதல் அதிகாரத்தை வாரி வழங்கியிருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கின்றனர்.


Click it and Unblock the Notifications
