அதிமுக வேண்டாம்.. தனியாகவே இறங்குவோம்.. யோசிக்கும் விஜய்? இருந்தாலும் திமுகவுக்கு சிக்கலா? எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது. அதே சமயம் விஜய் அதிமுகவுடன் செல்லும் திட்டத்தில் இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 40லும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தவிர மற்ற எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது. அதிலும் முதல்முறையாக ஒரு தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது.
கூட்டணி: தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு தர்க்க அடிப்படையில் பார்க்காமல் சதவிகித அடிப்படையில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம்.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம் .
தனியாக திமுக வென்ற வாக்குகள் 26.93 சதவிகிதம் .
அதிமுக கூட்டணி வென்ற வாக்குகள் 23.05 சதவிகிதம் .
தனியாக அதிமுக வென்ற வாக்குகள் 20.46 சதவிகிதம் .
நாம் தமிழர் தனியாக வென்ற வாக்குகள் 8.20 சதவிகிதம்.
கூட்டணி: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக நாம் தமிழரை கூட்டணிக்கு அழைக்கலாம். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக வேண்டாம்: அதே சமயம் அதிமுக வேண்டாம் என்றும் விஜய் நினைக்கிறாராம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நம்ம பெயர் அடிபடும்.. ஏற்கனவே சர்க்கார் சமயத்தில் அதிமுகவை எதிர்த்து உள்ளோம். அப்படியே இருக்கலாம்.
அதோடு நாம் தனியாக இறங்குவதே சரி. புதிய கட்சி கூட்டணி வைத்தால் நம்மை நல்ல மாற்றாக பார்க்க மாட்டார்கள் என்று விஜய் நினைக்கிறார்.
நம்பர்ஸ் முக்கியம்: கணக்குப்படி பார்த்தால் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம். இது சட்டசபை தேர்தலில் குறைந்தால் கூட 43 வரை செல்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
எதிர் பக்கம் அதிமுக கூட்டணிக்கு 25 சதவிகிதம் வரை வரலாம். நாம் தமிழர் அவர்களோடு சேரும் பட்சத்தில் அது 33 ஆக உயரும் வாய்ப்புகள் உள்ளன.
இதில் இனி விஜய்யின் வாக்கு சதவிகிதம்தான் சந்தேகம். பொதுவாக தமிழ்நாட்டில் புதிதாக நடிகர்கள் கட்சி தொடங்கினால் வாக்கு சதவிகிதம் முதல் தேர்தலில் 5 வரை இருக்கும். முறையான கட்டமைப்பு இருந்த தேமுதிகவிற்கே 5 சதவிகிதம்தான் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகபட்சம் 7 கொடுத்தால் கூட.. அவர்கள் அதிமுக உடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது 40 ஆகவே இருக்கும்.
ஆனால் விஜய் தனியாக இருந்தால் திமுகவின் கிறித்துவ, முஸ்லீமின் 14 சதவிகித வாக்குகளை பிரிப்பார். இது திமுகவிற்கு எதிராக மாறும். நாம் தமிழர்- அதிமுக - விஜய் கூட்டணி இல்லாமலே விஜய் தனியாக நின்றாலே அது திமுகவிற்கு சிக்கலாகும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications