Exclusive: ராஜ்குமார் ஒன்றும் அப்பாவி அல்ல.. வீரப்பன் அவரை கடத்த காரணம் இதுதான்.. வ.கவுதமன் பளிச்!
சென்னை: தந்தங்களுக்காக நூற்றுக் கணக்கில் யானைகளைக் கொன்ற, காவல்துறையினரை வெடி வைத்துக் கொன்ற சந்தனக் கடத்தல் வீரப்பன் எப்படி நாயகனாக கொண்டாடப்படுகிறார்? ராஜ்குமாரை கடத்தியது ஏன்? என இயக்குநர் வ.கவுதமன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசுகிறார்.
தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் இரு மாநில அரசுகளுக்கும் பெரும் சவாலாக விளங்கிய சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதை, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், வீரப்பன் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக எழுந்துள்ளன. வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல்துறையினரின் அராஜகம் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படும் அதேசமயம், வீரப்பன், காவல்துறையினரை வெடி வைத்துக் கொல்லும் சம்பவங்களும் உள்ளன. அப்படியெனில், அவரை எப்படி ஹீரோவாக கொண்டாட முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, இயக்குநர் வ.கவுதமன் பதில் அளிக்கிறார்.

வ.கவுதமன்: போர்க்களத்தில் எதிரியை அழிப்பது போர்க்கள விதி. வீரப்பன் தேடுதல் வேட்டையில் வீரப்பனைச் சுற்றி உள்ள மக்கள், அப்பாவிகள் பலரை காவல்துறை, அதிரடிப்படையினர் கொன்றனர். வீரப்பன் எங்காவது போலீஸ்காரரின் மனைவி, பிள்ளைகள் யாரையாவது கடத்திச் சென்றாரா? எதிரியுடன் நேருக்கு நேராக மோதினார். எதிரிக்கு எதிரி என்றே நின்றார் வீரப்பன். எவன் ஒருவன் காக்க வருகிறேன் எனச் சொல்லி கழுத்தை அறுக்கிறானோ, அவனை விடவும், அவனை மட்டுமே வேரறுத்த வீரப்பன் நாயகன் தான்.
எதிரியுடன் நேருக்கு நேராக நின்றவன் வீரப்பன். எதிரியான வீரப்பனை விடவும், வீரப்பனை சுற்றி உள்ள அத்தனை பேரையும் காவல்துறை சிதைத்திருக்கிறது. நேர்மையற்ற காவல்துறையுடன் ஒப்பிடும்போது, இந்த நேர்மையற்ற கூட்டத்தின் முன்பாக வீரப்பன் நாயகன்.
ராஜ்குமார் அப்பாவி அல்ல: நடிகர் ராஜ்குமார் ஒன்றும் அப்பாவி அல்ல. ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. 1993ல் நடந்த காவிரி கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தமிழர்களின் சொத்துகள் எரிக்கப்பட்டது. அவர்களை எல்லையில் நின்று காப்பாற்றி உதவியவர் வீரப்பன். அந்த கலவரத்தை நடத்தியது யார்?
பல நூற்றுக்கணக்கானவர்களை அடித்து முடமாக்கி, பலரை கொன்று, இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தையை துணி துவைப்பது போல் அடித்து சாக்கடையில் தூக்கிப் போட்டது போன்ற கொடூரங்கள் நடந்தன. இதெல்லாம் ராஜ்குமார் ரசிகர்களால் நடத்தப்பட்டது என பத்திரிகைகளே எழுதின. பலர் வாக்குமூலம் கொடுத்தனர். அப்படிப்பட்ட ராஜ்குமாருக்கு பாடம் கற்பிக்கத்தான் ராஜ்குமாரை தூக்கினார் வீரப்பன்.
ராமாவரம் போலீஸ் ஸ்டேஷன் கொடூரம்: ராமாவரம் என்ற காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என முறையிட்டபோது, கதவைச் சாத்தி அத்தனை பெண்களையும் வன்புணர்வு செய்து கொன்றனர். தன்னை தேடிக் கொண்டிருந்த போலீசார் நிறைந்த அந்தக் காவல் நிலையத்தை நடு ராத்திரியில் திறந்து, அத்தனை காவலர்களையும் நெஞ்சில் எட்டி உதைத்து நெற்றியில் சுட்டான் வீரப்பன். வீரப்பன் நாயகன் இல்லையா?
உனது ரசிகர்கள் செய்த கொடுமைகளை வேடிக்கை பார்த்தாயே என்றுதான் ராஜ்குமாரை காட்டுக்குள் கூட்டி வந்தார் வீரப்பன். ராஜ்குமார் காட்டுக்கு வந்த சில நாட்களில் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது. அவரது மூட்டு வலியைப் போக்க உடும்பு கொழுப்பைத் தடவி விட்டவன் வீரப்பன். அதை நெகிழ்வோடு சொல்லி இருக்கிறார் ராஜ்குமார். 108 நாட்கள் கழித்து ராஜ்குமார் புறப்படும்போது இரண்டு பேருமே கலங்கினர்.
ராஜ்குமாரை கடத்தி வந்து, தனக்கு ஸ்விஸ் பேங்கில் பணம் போட வேண்டும் என்று கேட்டு மிரட்டவில்லை. நேர்மையற்ற கூட்டத்தின் முன்பு வீரப்பன் செய்த செயல் நியாயமானது, அறம் உள்ளது தான். தனக்கு கொடுக்கப்பட்ட பணத்தை, அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார். ஆனால், வீரப்பனுக்கு கொண்டு வரப்பட்ட பணத்தையே களவாடியது ஒரு கூட்டம்.












Click it and Unblock the Notifications