மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: மனைவி பாஸ்போர்ட் பெற கணவனின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என்றும் நீதிபதி விமர்சித்திருந்தார்.
சென்னையை சேர்ந்தவர் ரேவதி. இவர் பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று தனது விண்ணப்பத்தின் ஃபாலோ அப் குறித்து கேட்டுள்ளார். அப்போது கணவரின் கையெழுத்து பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து பரிசீலனை செய்ய முடியும் என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்ததாக தெரிகிறது.
ஆனால் தன் கணவருக்கும் தனக்கும் இடையில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் தனது கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது என தெரிவித்திருந்தார். ஆனாலும் பாஸ்போர்ட் அதிகாரி அதை ஏற்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து ரேவதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தனது கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால் கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ அவரது கையெழுத்தையோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை.
கணவரின் கையெழுத்தை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் பெற வேண்டும் என வற்புறுத்துவதன் மூலம், ஒரு பெண்ணை கணவரின் உடமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது.
ஏற்கெனவே கணவன் மனைவி உடனான உறவில் பிரச்சினை உள்ள நிலையில் கணவரிடம் இருந்து கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாது. திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை.
கணவரின் அனுமதி, கையெழுத்து இல்லாமல் மனைவி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்பதால் கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது. மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து 4 வாரங்களில் பாஸ்போர்ட் வழங்க மண்டல அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த உத்தரவை மகளிர் அமைப்பினரும், இது போன்ற விவாகரத்தால் பாதிக்கப்பட்டவர்களும் வரவேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications