100 யூனிட் இலவச மின்சாரம் அவ்வளவுதானா.. ஒரே வரியில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செந்தில் பாலாஜி
இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்பிற்குப் பிறகு இலவச மின்சாரம் நிறுத்தப்படலாம் என்றெல்லாம் தகவல்கள் பரவின. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர முதல் 100 யூனிட் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மின்வாரியம்
இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டில் இருக்கும் மின் நுகர்வோர் குறித்த உரிய டேட்டா இல்லை என்றும் இதை கலெக்ட் செய்யவே இந்த பணிகளைச் செய்வதாக மின் வாரியம் அறிவித்தது.. இதற்காக சில முறை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. 100 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட மானியங்களைப் பெற ஆதார் மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

மின் இணைப்பு
இதையடுத்து பல லட்சம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர். இந்தச் சூழலில் ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் இரண்டு மின் இணைப்புகள் இருந்தால்.. அதை மாற்றி ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு மட்டுமே தர வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியதாகத் தகவல் பரவியது. இதனால் ஒரே குடியிருப்பில் இருப்போருக்கு 100 யூனிட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

100 யூனிட் இலவச மின்சாரம்
மேலும், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல் பரவியது. இது தொடர்பாக இணையத்தில் பல விதமான தகவல்கள் பரவின. மேலும், 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என்றும் தகவல்கள் பரவின. இதனிடையே இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இதுபோல தகவல் பரவ என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள செந்தில் பாலாஜி, இது குறித்து உரிய விளக்கத்தையும் கொடுத்துள்ளார். திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூரில் இருக்கும் அதிகாரி ஒருவர், உயர் அதிகாரிகளுடன் எந்தவொரு ஆலோசனையும் செய்யாமல், ஒரே வீட்டில் பல மின் இணைப்புகள் இருந்தால்.. அவற்றை ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என்று தன்னிச்சையாகச் சுற்றறிக்கை அனுப்பியதாகத் தெரிவித்தார்.

தொடரும்
இதுவே சமூக வலைத்தளங்களில் பல விதமாகப் பரவியதாகக் குறிப்பிட்ட அவர், மின்வாரியம் சார்பில் இதுபோல எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும், ஒரு நபர் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகளை வைத்திருந்தாலும் கூட..இவை ஒரே கனெக்ஷனாக இணைக்கப்படாது என்றும் இலவச யூனிட் மின்சாரம் தொடரும் என்பதையும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

விவசாயிகள்
மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஸ்டாலின் அரசு விவசாயத்திற்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குகிறது. இப்போது விநியோக உள்கட்டமைப்பில் சில சிக்கல் உள்ளது. அதை வலுப்படுத்திய பிறகு, அடுத்தாண்டு முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications