மிகப்பெரிய லூப் ஹோல்.. விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் இவ்வளவு பெரிய ஓட்டையா?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
மாநிலத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அரச சார்பில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பு, பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்காக தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இத்திட்டத்தின் நுட்பமான அரசியல் மற்றும் பொருளாதார செலவுகளை உற்றுநோக்கும் துறைசார் வல்லுநர்கள், அரசின் இந்தத் திட்டமிடலில் இருக்கும் ஒரு பெரிய லூப்ஹோல் மற்றும் நிதிச் சவாலைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசு மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுக்கும் மக்கள்
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்... ஏழை எளிய மக்களுக்கு உதவும் அதேவேளையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பொது சுகாதார முறையை பலப்படுத்துவதாகும்.
இதுவரை தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் செலுத்தி பிரசவம் பார்த்து வந்த நடுத்தர மற்றும் எளிய குடும்பங்கள், தற்போது 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் அரசின் பிரசவப் பராமரிப்புச் சலுகைகளை கருத்தில் கொண்டு, இனி பெருமளவில் அரசு மருத்துவமனைகளை நோக்கியே படையெடுக்கத் தொடங்குவர்.
மக்களின் இந்தத் தேர்வு வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்றாலும், இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு போதுமானதா?
தமிழக அரசு மருத்துவமனைகளில் வழக்கமாக ஆண்டுக்குச் சராசரியாக 4.4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன.
தற்போதைய சந்தை நிலவரப்படி 1 கிராம் தங்கத்தின் விலை மற்றும் தயாரிப்புச் செலவுகளுடன் சேர்த்துப் பார்த்தால், 4.5 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கவே ஆண்டிற்கு ரூ.350 முதல் ரூ.400 கோடிகள் தேவைப்படும்.
ஆனால், இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு, தனியார் மருத்துவமனைகளிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு மாறப்போகும் பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 20% முதல் 30% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு பிரசவங்களின் எண்ணிக்கை 6 முதல் 7 லட்சத்தைக் தொடுமானால், தங்கத்தின் விலை உயர்வு மற்றும் நிர்வாகச் செலவுகளையும் கணக்கிடும்போது, அரச ஒதுக்கியுள்ள ரூ.560 கோடி நிதி என்பது பாதியிலேயே தீர்ந்துபோகும் ஆபத்து உள்ளது.
அரசு எதிர்கொள்ள வேண்டிய நடைமுறைச் சவால்கள்!
1. கூடுதல் நிதிச் சுமை: பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.560 கோடியைத் தாண்டி கூடுதல் நிதியை அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
2. கட்டமைப்பு சிக்கல்: பிரசவங்களின் திடீர் உயர்வால் அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு வார்டுகள், படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவர்களின் பணிச்சுமை பலமடங்கு அதிகரிக்கும்.
திட்டம் மிகவும் அற்புதமானது என்றாலும், அரசு மருத்துவமனைகளில் உருவாகப்போகும் இந்த பிரசவங்கள் எண்ணிக்கை மற்றும் தங்கம் விலை உயர்வைச் சமாளிக்க, அரசு தனது நிதி ஒதுக்கீட்டை மேலும் உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்பதே நிதர்சனம்!


Click it and Unblock the Notifications
