சென்னை வியாசர்பாடி டூ பாரிமுனை.. பேசின் பாலத்திற்கு விடிவு காலம் பிறக்கிறதா? அமைச்சர் விளக்கம்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் இருந்து சென்ட்ரல் பாரிமுனை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பேசின் பாலம் அதிக போக்குவரத்து நெரிசலுடன் இருக்கும். இந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு, மாற்றுப் பாலம் போட முடியுமா அல்லது விரிவுபடுத்த முடியுமா எனப் பொறியாளர்களிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடியது. இன்று சட்டசபையில் செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் தங்களது தொகுதி தொடர்பாக கேள்வி எழுப்புவது வழக்கம்.

பெரம்பூர் எம்எல்ஏ கேள்வி
அந்த வகையில் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த ஆர்.டி.சேகர் பேசுகையில், "சென்னை வியாசர்பாடியில் இருந்து சென்ட்ரல் பாரிமுனை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் 'பேசின் பாலம்' அதிக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. இதனை அகலப்படுத்த அரசு முன் வருமா?" என்று கோரிக்கையுன் கேள்வி எழுப்பினார்.
பேசின் பாலம் குறித்து விளக்கம்
இதற்குப் பதில் அளித்த நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, "சென்னையில் உள்ள பேசின் பாலம் புகழ்பெற்ற பாலம். இதற்குப் பதிலாக மாற்றுப் பாலம் போட முடியுமா விரிவுபடுத்த முடியுமா எனப் பொறியாளர்களிடம் கலந்து பேசுவோம். அங்கு மாற்றுப் பாலம் போட முடியுமா? விரிவு படுத்த முடியுமா? என ஆராய்ந்து இந்த ஆண்டே முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
ராயபுரம் எம்எல்ஏ கோரிக்கை
பெரம்பூரின் பக்கத்து தொகுதியான ராயபுரம் தொகுதி எம்எல்ஏவான ஐட்ரீம் ரா.மூர்த்தி பேசுகையில், "ராயபுரம் தொகுதி மன்னார் சாமி கோயில் தெருவிலிருந்து ஆர்.கே.நகர் வரை சூரிய நாராயண செட்டி தெரு வரை இருக்கக்கூடிய 3 கிலோமீட்டர் திருவொற்றியூர், எண்ணூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி வழியாக சென்னை வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சூரிய நாராயண மன்னார் சாமி கோயில் தெரு வழியாக தான் பாரிமுனை செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே சூரிய நாராயண செட்டி தெருவில் இருந்து ஆர்.கே.நகர் டோல்கேட் வரை 3 கிலோ மீட்டருக்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.
ஆர்கே நகர் டோல்கேட்
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ரா.மூர்த்தி கூறுகிற சூரிய நாராயண செட்டி தெருவில் இருந்து ஆர்.கே.நகர் டோல்கேட் வரை உள்ள சாலை போக்குவரத்து அதிகமாக உள்ள சாலை தான். இதைக் கோரிக்கையாக எடுத்துக் கொண்டு இந்த ஆண்டே முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
திருப்போரூர் பாலாஜி
இதேபோல் இன்று திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி பேசுகையில், "திருக்கழுக்குன்றம் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறையின் இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. விரைந்து முடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
35 பாலங்கள் கட்டப்படுகிறது
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது 71 பாலங்கள் நிலுவையில் இருந்து வந்தது. தற்போது அதில் 36 பாலங்கள் நிறைவடைந்து விட்டது. 35 பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கியமான மேம்பாலங்களை விரைந்து முடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
சரஸ்வதி எம்எல்ஏ கேள்வி
இதனிடையே ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவான பாஜகவின் சரஸ்வதி கூறுகையில், "ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி கொடுமுடி வட்டம் கொல்ல கோயில் பேரூராட்சி மொளபாளையம் சந்திப்பில் ரவுண்டானா அமைத்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
மொடக்குறிச்சி ரவுண்டானா
சரஸ்வதி எம்எல்ஏவின் இந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ வேலு, "ரவுண்டானா அமைக்க போதுமான இடம் இல்லை, ஈரோடு முதல் கரூர் வரை மொத்த சாலை 66 கிலோ மீட்டர். இது மாநில நெடுஞ்சாலையாகும். இதில் 18 கிலோ மீட்டர் சாலையை நான்கு வழிச் சாலையாக 'முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு' கீழ் அகலப்படுத்தபட்டு வருகிறது. அதேபோல், மீதமுள்ள 43 கிலோ மீட்டர்; 7 மீட்டர் அகலம் கொண்ட இருவழிச் சாலையை இந்த ஆண்டு 8 கிலோ மீட்டர் சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்த பரிசீலனை செய்யப்படுகிறது. அதேபோல், மீதமுள்ளவையும் நிதிநிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்படும்" என்று எவ வேலு கூறினார்.












Click it and Unblock the Notifications