‘கேம் சேஞ்சர் திருமா’.. வரவேற்கும் பாஜக.. விசிக மாநாட்டில் அதிமுக, தவெக? திமுகவிற்கு பெரிய சிக்கல்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தப்போகும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூட்டணி கணக்குகள் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் அவ்வப்போது திமுகவை சீண்டி வருகிறது. இதனிடையே விசிக மாநாட்டினை பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல் முருகன் வரவேற்றுள்ளார். இதனால் கேம் சேஞ்சராக திருமாவளவன் உருவெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணி கடந்த 2019ல் தொடங்கி மிகவும் வலுவாக உள்ளது.2019ல் தமிழகம் புதுச்சேரியில் நடந்த லோக்சபா தேர்தலில் 40க்கு 39 இடங்களில் வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அடுத்து நடந்த ஊராட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

இதேபோல் இந்த ஆண்டு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, தமிழகம் புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டிற்கு பிறகு திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற்று அசத்தியது. திமுக வரிசையாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற கூட்டணி பலம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் பாஜக அல்லது அதிமுக கூட்டணிக்கு வரும் என்று கடந்த தேர்தலில் கணிப்புகள் எழுந்தன. ஆனால் கணிப்புகள் தவிடு பொடியாகின.
அதேநேரம் திமுக கூட்டணியில் கட்சிகள், திமுகவை சீண்டாமல் அமைதியாகவும் இல்லை அவ்வப்போது இடதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் காமராஜர் ஆட்சி அமைப்போம், தனித்து களம் இறங்கி வெல்லும் அளவிற்கு பலம் பெற வேண்டும் என்று கூறி வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி, திமுக அரசை விமர்சித்தும் வருகிறது. அண்மையில் கூட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இதேபோல் டாஸ்மாக் மது விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக மாறி உள்ளார் விசிக தலைவர் திருமாளவன்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு ஏற்பாடுகள் குறித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூறினார். திருமாவளவனின் இந்த அறிவிப்பு, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் விசிக தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருக்கிறது. அ.தி.மு.க.வை திருமாவளவன் திடீரென்று அழைத்ததில் அரசியல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2026ல் திமுக தனது கூட்டணியை தக்க வைத்துக் கொண்டதால் தான் 2024 தேர்தலில் வென்றதாக கூறும் அரசியல் நிபுணர்கள், இந்த கூட்டணி அப்படியே தொடர்ந்தால் தான் எந்த சிக்கலும் இன்றி 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் என்றும், மாறாக இந்த கூட்டணி உடைந்தாலோ அல்லது அதிமுக, தவெக (விஜய்) கூட்டணி அமைந்தாலோ அல்லது தவெக தனித்து நின்றாலோ அது திமுகவிற்கே சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதனிடையே திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும், பாஜகவும் விரும்புகின்றன. தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அதிமுக தனது பக்கம் இழுக்க விரும்புகிறது. அது தற்போதைய நிலையில் சவாலான காரியம் ஆகும். மறுபக்கம் பாஜகவும் முயற்சி செய்து வருகிறது.
ஏனெனில் திமுக கூட்டணி உடைந்தால் பாஜக, அதிமுக கட்சிகளுக்கே பெரிய லாபம் ஆகும். அதிமுக தற்போது கடும் நெருக்கடியில் இருக்கிறது. வரும் 2026 தேர்தலில் வெல்வதற்காகவும், தோல்வியில் உள்ள கட்சியினருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் எடப்பாடி பழனிசாமி புதிய வியூகத்தை வகுக்க வேண்டிய நிலையில் உள்ளார். எனவே திருமாவளவனை தனது கூட்டணிக்கு கொண்டுவர விரும்புகிறார்.
விசிகவுமே திமுக அரசு மீது சில விஷயங்களில் அதிருப்தியில் இருக்கிறதாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். அடுத்ததாக கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழக பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்றது உள்ளிட்ட விவகாரங்களில் அதிருப்தியில் உள்ளதாம். மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளையும் திருமாவளவன் விமர்சித்து வருகிறார். இது ஒருபுறம் எனில் , மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல் முருகன், விசிக மாநாட்டை வரவேற்றுள்ளார். இதுபற்றி கூறும் போது, வருகிற 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு வரவேற்கத்தக்கது. இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று இருக்கும் நேரத்தில் திமுகவை மிரட்டவே அவர் இதை பயன்படுத்திக் கொள்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது என்றார்.
இதனிடையே விசிகவின் மாநாட்டில் அதிமுக நிச்சயம் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாம். அதேநேரம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியை பொறுத்தவரை உறுதி செய்ய முடியாது என்கிறார்கள் ஒருவேளை கலந்து கொண்டால் அது திமுகவிற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அரசியல் நிபுணர்கள கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக திருமாளவன் நடத்த போகும் போதை ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் சலசலசப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications