கழுத்து நரம்பு புடைக்க பேசும் விஜய்.. திமுக ஓட்டு உடையுமா? பரபர சூழலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதமே தனது தேர்தல் பணிகளை திமுக கையில் எடுக்க துவங்கிவிட்டது.. இந்த முறை, எப்படியும் 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று திமுக கூட்டணி டார்கெட் வைத்து, இதற்கான வியூகங்களை வகுத்து நகர்ந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. முன்கூட்டியே தயாராகி வருகின்றன.

இதில் அதிமுகவை பொறுத்தவரை, 'மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப் பயணத்தை நடத்தி வருகிறார்..
அதிமுக அதிரடி
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரோடு ஷோ ஒன்றை நடத்தி மக்களின் குறைகளைக் கேட்கவும் இந்தப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, தன்னுடைய பயணம் மூலம் மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவைப் பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்" என்றும் நம்பிக்கையுடன் கூறிவருகிறார்.
மற்றொருபுறம், தவெக வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று செயற்குழுவில் நடிகர் விஜய் அறிவித்தது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. கடந்த காலங்களில் திமுக எதிர்ப்பு வாக்குகளை, அதிமுக, சீமான் இருவரும் பெற்றுவந்த நிலையில், இந்த முறை அவை யாவும் விஜய் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கணித்து சொல்கிறார்கள்.
திமுக கூட்டணி வியூகம்
ஒருபக்கம் அதிமுக பாஜக கூட்டணி, மறுபுறம் விஜய் என இரு தரப்புக்கு மத்தியில் திமுக கூட்டணி வியூகம் அமைத்து வருகிறது.. இதில் திமுகவை பொறுத்தவரை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முகாம்களை துவக்கியிருப்பது, மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல, 'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சாரமும் கவனம் பெற்று வருகிறது.. இதில், திமுக நிர்வாகிகள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.. அப்போது, மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் போன்ற திட்டங்களின் பலன்கள் மக்களை சேருகிறதா? என்றும் வீடு வீடாக கேட்டு வருவதும் தேர்தல் யுக்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் ஓட்டுகள்
எனினும், அதிமுக, தவெக, பாஜக கட்சிகளை வென்றெடுக்க திமுக தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டிருந்தார்.
இன்று மா.செ. கூட்டம்
அதில் "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 17-7-2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும். அதில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தவெக, அதிமுக, பாஜகவை வீழ்த்தி, வாக்குகளை அள்ளக்கூடிய திட்டங்கள், ஆலோசனைகள், விவாதங்கள், இன்றைய தினம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டதால், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
அந்தவகையில், காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியிருக்கிறது.. அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த மா.செ. கூட்டத்தை துவங்கி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும், தேர்தல் தொடர்பான ஆலோசனைகளையும் மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் வழங்குவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications