முதல்வரை challenge செய்த விஜய்! கைது செய்வீர்களா? தனக்கே உரிய பாணியில் பதிலளித்த துரைமுருகன்
சென்னை: விஜய்யை கைது செய்யும் சூழல் வந்தால் கைது செய்வோம் என்றும் தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம் என்றும் மூத்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சென்னையில் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் வெளியிட்ட வீடியோவில் "என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள், என் தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம்" என கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு துரைமுருகன் பதிலளிக்கையில், அவர் கட்சியின் தலைவர். அதனால் கட்சிக்காக என்ன பேச வேண்டுமோ அதை பேசியுள்ளார்.
விஜய்யை கைது செய்யும் சூழல் வந்தால் கைது செய்வோம். தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம் என்றார். அது போல் "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை" என நீதிபதி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு துரைமுருகன், "நீதிபதி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்" என பதிலளித்தார்.
41 பேர் பலி
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தின் போது கரூரில் உள்ள மக்களுடன் இருக்காமல் அவசர அவசரமாக விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்துவிட்டார்.
3 நாட்கள் கழித்து வீடியோ
இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் என் வாழ்க்கையில் இது போன்ற சூழலை சந்தித்ததில்லை. மனது முழுக்க வலி இருக்கிறது. வலி மட்டும்தான். சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருவதற்கு ஒரே ஒரு காரணம்தான். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும். இதற்காக நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால்தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களோடு பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் என் மனதில் மிகவும் ஆழமாக இருக்கிறது.
அரசியல் காரணங்கள்
அதனால்தான் அரசியல் காரணங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை மட்டுமே நினைவில் வைத்து அதற்கான இடங்களை தேர்வு செய்து, காவல் துறையிடம் அனுமதி கேட்போம். ஆனால் நடக்கக் கூடாதது நடந்து போச்சு!
மனிதன்தானே
நானும் மனிதன்தானே. இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கும் போது அந்த ஊரை விட்டுவிட்டு எப்படி கிளம்பி வர முடியும்? நான் அங்கு திரும்பி போகவே விரும்பினேன். ஆனால் நான் அப்படி சென்றால் அங்கு அதை வைத்து வேறு பதற்றமான சூழல்கள் நடந்து விடக் கூடாது என எண்ணிதான் நான் அங்கு செல்வதை தவிர்த்தேன்.
அத்தனை குடும்பங்கள்
இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்ன ஆறுதல் சொன்னாலும் உங்கள் இழப்புக்கு ஈடாகாது என எனக்கு தெரியும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் விரைவில் நலம்பெற வேண்டும் என இந்த நேரத்தில் நான் வேண்டிக் கொள்கிறேன்.
விரைவில் சந்திப்பேன்
கூடிய சீக்கிரமே உங்களை நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களோட வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் தலைவர்கள், நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 5 மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்றுள்ளோம். இது போல் அசம்பாவிதங்கள் எதுவுமே நடக்கவில்லை.
கரூரில் மட்டும் ஏன் இப்படி?
கரூரில் மட்டும் இப்படி ஏன், எப்படி நடந்தது. மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மைகளை வெளியே சொல்லும் போது கடவுளே இறங்கி வந்து சொல்வது போல் எனக்கு தோன்றியது.
உண்மை வெளியே வரும்
சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் போய் பேசியதை தாண்டி எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை. இருந்தாலும் என் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மீது முதல் தகவல் அறிக்கை போடுகிறார்கள். சமூகவலைதளங்களில் உண்மைகளை சொல்லும் தோழர்கள் மீதும் எஃப்ஐஆர் போடுகிறார்கள்.
என் மீது கை வையுங்கள்
சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்னு வீட்டிலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நமது அரசியல் பயணம் வலிமையுடன் இன்னும் தைரியத்துடன் தொடரும். இவ்வாறு விஜய் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications