கிட்ட கூட நெருங்கல.. ‘ஸ்வீப்’ அடிக்கும் பாஜக.. நியூஸ் 18 கருத்துக்கணிப்பு ஒட்டுமொத்த ரிசல்ட் இங்கே!
சென்னை: நாடு முழுவதும் நியூஸ் 18 குழுமம் நடத்திய லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 242 தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 174 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தை பாஜக ஸ்வீப் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளாவிலும் பாஜக குறிப்பிடத்தக்க நம்பர்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கிறது நியூஸ் 18 கணிப்பு முடிவுகள். மாநில வாரியாக கருத்துக்கணிப்பு ரிசல்ட்டை சுருக்கமாக பார்க்கலாம்.

தமிழ்நாடு: நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் INDIA கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெறும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக அதிக இடங்களில் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி 51 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 13% வாக்குகளையும், அதிமுக 17 % வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அணியை விட குறைவான வாக்கு சதவிகிதத்தைப் பெற்றாலும் கூடுதலாக 1 சீட்டில் வெல்லும் என்கிறது நியூஸ் 18 கருத்துக்கணிப்பு ரிசல்ட்.
கேரளா: கேரளாவில் மொத்தம் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் நியூஸ் 18 - சி.என்.என் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 14 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18 சதவிகித வாக்குகளும் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி 47 சதவிகித வாக்குகளையும், ஆளும் இடதுசாரி முன்னணி 32 சதவிகித வாக்குகளையும் மற்றவர்கள் 3 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தலைநகர் டெல்லியில் சாந்தினி சௌக், கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடகிழக்கு டெல்லி, வட மேற்கு டெல்லி (தனி), தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி என மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 7 இடங்களிலுமே வெற்றி பெறும் என நியூஸ் 18 போல் ரிசல்ட் தெரிவிக்கிறது.
டெல்லியை பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் தேர்தலில் 58 சதவீத வாக்குகளும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகளும், மற்ற கட்சிகளுக்கு 3 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என நியூஸ் 18 கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார்: பீகாரில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கான மெகா சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பீகாரில் 38 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணி 58 சதவிகித வாக்குகளும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 28 சதவிகித வாக்குகளையும் மற்றவர்கள் 13 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக கூட்டணி கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும் ஹரியாணாவில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹரியாணாவில் பாஜக கூட்டணிக்கு 62 சதவீத வாக்குகளும், எதிர்க் கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 29 சதவீத வாக்குகளும், மற்ற கட்சிகளுக்கு 9 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என நியூஸ் 18 - சி.என்.என் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம்: 29 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 28 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 1 தொகுதியில் மட்டுமே ம.பியில் வெல்ல வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு பாஜக அணிக்கு 55 சதவீத வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 38 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 7 சதவீத வாக்குகளும் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்: தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப்பில் மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. 13 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் இந்த முறை காங்கிரஸ் கட்சி 7 சீட்களில் வெற்றி பெறும் என நியூஸ் 18 கணிப்பு தெரிவிக்கிறது. மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3 தொகுதிகளும், ஆளும் ஆத் ஆத்மிக்கு 1 சீட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 38 சதவிகித வாக்குகளும், பாஜகவுக்கு 13 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 15 சதவிகித வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம்: 4 மக்களவை தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என நியூஸ் 18 கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக கூட்டணிக்கு 67 சதவீத வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 27 சதவீத வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 6 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்: அனைவரும் மிக முக்கியமாக கருதுவது உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவைத்தான். காரணம், 80 மக்களவை தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் கூட்டணிக்கே, மத்தியில் ஆளும் வாய்ப்பு பிரகாசம்.
அந்த வகையில் உ.பியில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. நியூஸ் 18 சி.என்.என் கருத்துக்கணிப்பை பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 77 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உ.பியை பொறுத்தவரை பாஜக கூட்டணி 57 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் - சமாஜ்வாதி அடங்கிய இந்தியா கூட்டணி 26 சதவீத வாக்குகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் மற்ற கட்சிகள் 8 சதவீத வாக்குகளை பெறலாம் எனவும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக: ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் சுமார் 1 லட்சம் பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தெரிவிக்கிறது. அதில் இன்று 242 லோக்சபா தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
242 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவற்றில் பாஜக கூட்டணி 174 இடங்களிலும், இந்தியா கூட்டணி 61 இடங்களிலும், மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18 - சி.என்.என். கருத்துக்கணிப்பு முடிவுகள்
இன்று ரிசல்ட் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் - 242
பாஜக கூட்டணி - 174
இந்தியா கூட்டணி - 61
மற்றவை - 7












Click it and Unblock the Notifications