விஜய் கோரிக்கையை ஏற்றால் பெரும்பான்மை கிடைக்காது.. அதிமுக அப்செட்? தவிடுபொடியாகும் பாஜகவின் பிளான்?
சென்னை: விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக பெருமளவு தொகுதிகளை கொடுக்க முன்வருவதாக பேசப்படுவதால் அதிமுக அப்செட் ஆகியுள்ளதாம். இறுதியில் 80 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி வரை விஜய் கேட்டதாகவும், விஜய்யின் இந்த கோரிக்கையை ஏற்றால் 100 - 110 தொகுதிகளே கிடைக்கும் நமக்கு கிடைக்கும் என்பதால் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி கிடைக்காது என அதிமுக அப்செட் ஆகியுள்ளதாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு தொடங்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கொண்டு வர பாஜக மேலிடம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.

100- 110 தொகுதிகளே கிடைக்கும் என
எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று தவெக தரப்பில் கூறப்பட்டாலும் திரைமறைவில் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்தாக உள்ளது. தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவதென்றால் 80 தொகுதிகளை விஜய் கேட்பதாகவும் துணை முதல்வர் பதவியும் தர வேண்டும் என்றும் தவெக தரப்பில் கேட்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த கோரிக்கையை ஏற்றால் 100 - 110 தொகுதிகளே கிடைக்கும் என்பதால் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி கிடைக்காது.. கூட்டணி ஆட்சிதான் அமைக்க வேண்டியிருக்கும் என்பதால் அதிமுகவினர் அப்செட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியை வீழ்த்த பெரிய அளவிலான கூட்டணி இருக்க வேண்டும் என பாஜக விரும்புவதால் விஜய்யை இழுக்க பாஜக ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
அதிமுக அப்செட்?
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய்க்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டுவதாகவும் இதன் வெளிப்பாடே அதிமுகவினர் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதிமுக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருவதாக இருந்தால் யாராக இருந்தாலும் என்று அதிமுகவினர் தங்கள் பேட்டிகளில் அழுத்தமாக சொல்வதும் இதில் கவனம் பெற்றுள்ளது.
இதனால் பாஜக முயற்சி கைகூடுமா? இல்லை பலனளிக்காமல் போகுமா? இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருடன் விஜய் இந்த ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.
கூட்டணி இல்லை?
தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக பேச்சு அடிபடும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்தாலும் அதிமுக மற்றும் தவெக என இரு தரப்புமே இந்த தகவலை பொதுவெளியில் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை ஈடுபடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதேபோல தவெகவும் இதனை மறுத்தே வருகிறது. சிடிஆர் நிர்மல் குமாரும் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். இதனால் என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் செல்லவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பாஜகவினர் ரஜினிகாந்தை வைத்து விஜய் கட்சி, ஆதவ் அர்ஜுனாவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications