பாஜகவில் இணைய போவதாக பரவிய தகவல்.. பதறிய மாஃபா பாண்டியராஜன்.. எக்ஸ் தளத்தில் டக்கென கொடுத்த விளக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாஜகவில் இணைய போவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவிய நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார் அவர். எடப்பாடி தலைமையில் அதிமுகவில் செயல்படுவேன் என தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்து இருகிறார் மாஃபா பாண்டியராஜன்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க தங்கள் கட்சிகள் சீட் கிடைக்காத காரணத்தாலும், வேறு கட்சியின் ஈர்ப்பாலும் ஒரு சிலர் கட்சி தாவி வருகின்றனர்.

அதன்படி தான் காங்கிரசில் இருந்து விஜயதரணி பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் விஜயதரணியும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காமல் டெல்லியில் முகாமிட்டு இருந்தார். விஜயதரணியிடம் பாஜகவில் இணைய போவதாக வெளியாகும் தகவல் குறித்து கேட்ட போது அவர் மறுக்கவும் இல்லை.
மேலும் சிலர் பாஜகவில் இணையலாம்: இதனால், அவர் பாஜகவில் இணைய போவதாக யூகங்கள் கொடி கட்டி பறந்த நிலையில், நேற்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3 வது முறையாக வெற்றி பெற்றிருந்த விஜயதாரணி நேற்று பாஜகவில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இது வெறும் டிரெயிலர் தான் மெயின் பிக்ஷர் இனிதான் இருக்கிறது என்று சொல்லும் வகையில், மேலும் பல முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய இருப்பதாக அண்ணாமலை கூறினார். பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது மேலும் சிலர் பாஜகவில் இணையலாம் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. குறிப்பாக அதிமுகவில் இருந்து சிலர் பாஜகவில் இணையக் கூடும் என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மாஃபா பாண்டியராஜன் விளக்கம்: இந்த நிலையில், தான் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாஜகவில் இணைய இருப்பதாக சமூக ஊடகங்களில் பேச்சு அடிபட்டது. பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதோடு, பாஜகவுடனான கூட்டணி கதவு அடைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவின் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணைய போவதாக பரவிய தகவல்கள் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது.
இந்த நிலையில், பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:- "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன்" பதிவிட்டுள்ளார். இதன் மூலம் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணைய உள்ளதாக பரவி தகவலுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது












Click it and Unblock the Notifications