Cyclone: வங்கக்கடலில் உருவாகும் அக்வான் புயல்.. சென்னைக்கு ஆபத்தா? அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கும்?
சென்னை: வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற்று வரும் 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அதற்கடுத்த நாளில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக மாறும் பட்சத்தில் ஈரான் பரிந்துரைத்த அக்வான் புயல் எனப் பெயரிடப்படும் என்றும், தமிழில் இதற்கு அசுரன் என பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலில் இந்த புயல் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர், டிசம்பரில் புயல் உருவானால்..
அதே சமயம் சற்று திசை மாறினால் ஒடிசா பக்கம் புயல் கரையைக் கடக்கவும் வாய்ப்பு உள்ளது. இதே போன்று ஒரு சில நேரங்களில் வானிலை அமைப்புகள் சாதகமாக மாறினால் சென்னையில் கரையைக் கடக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் வங்கக்கடலில் ஏற்படும் வானிலை மாற்றங்களை வைத்தே கணிக்க முடியும். இன்னும் 3 நாட்களில் கிட்டத்தட்ட எங்கு கரையை கடக்கும், எங்கெல்லாம் மழைக்கு அதிகம் வாய்ப்பு இருக்கும் என தெரியவந்துவிடும்.
பெரும்பாலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கக் கடலில் புயல் உருவானால் அது சென்னை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளிலேயே கரையைக் கடக்க வாய்ப்பு அதிகம் எனவும், இதனால் தான் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைப்பொழிவு அதிகம் இருக்க காரணமாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை முன்பு கூறியிருந்தார்.
சென்னையில் கரையைக் கடக்குமா?
அதன் அடிப்படையில் ஏற்கனவே உருவான இரண்டு புயல்களும் அதாவது அர்னாப் மற்றும் முரசு புயல்கள், வங்கக் கடலில் உருவாகியிருந்தாலும் அவை இரண்டும் அக்டோபர் மாதத்தில் உருவானது என்பதால் சென்னையில் கரையை கடக்காமல், தெற்கு ஆந்திரப் பகுதியில் கரையை கடந்தது. இதனால் தற்போது உருவாக இருக்கும் அக்வான் புயல் சென்னையில் கரையைக் கடக்கவும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டுகளில் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் உருவான புயல்கள் சென்னையிலேயே கரையை கடந்தது என்பதும், மிகப்பெரிய அளவில் கனமழை, சூறாவளி காற்றால் பெரிய அளவில் சேதம் அடைந்து இருப்பது நினைவுகூரத் தக்கது. எனவே இந்த புயல் உருவாகுமா? அப்படி உருவாகினால் எந்த திசையில் நகரக்கூடும்? எங்கு கரையைக் கடக்கும் என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.
புயல் உருவாக வாய்ப்பு
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நவம்பர் 13 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14 ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுப்பெறும் பட்சத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.




Click it and Unblock the Notifications
