118 மெஜாரிட்டிக்கு 117 திமுக எடுத்தாலே அமித்ஷா விளையாடுவார்! விஜய்க்கு இவ்ளோ கூட்டம் கூடுதே: பிரபலம்
சென்னை: மேடைகளில் விவர பிழையுடன் விஜய் பேசினாலும், ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது? எனவே ஆட்சியாளர்கள் கவலைப்பட வேண்டியது விஜய் பேசும் விவரப்பிழைகளை கிடையாது, அந்த கூட்டத்தை பற்றிதான் கவலைப்பட வேண்டும். விஜய்க்காக வருபவர்கள் எல்லாருமே ரசிகர்கள் என்று எப்படி சொல்ல முடியும்? இப்படி சொல்லி சொல்லி, தங்களை தாங்களே திமுக ஏமாற்றி கொள்கிறது. ஆட்சியாளர்கள் மீதுள்ள அதிருப்திதான், பலரை விஜய்யிடம் கொண்டு போய் நிறுத்துகிறது என்று மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "விஜய்யை பார்த்து திமுக பயப்படுது.. விஜய் என்ன சொன்னாலும், ஒருவித பீதி வந்துவிடுகிறது.. திமுக போட்டு வைத்திருந்த கணக்கே வேறு.. அதாவது அதிமுக பலவீனமாக உள்ளது, பாஜகவுடன் கூட்டணி என்பதால் எதிர்மறையாக போய்விடும்..

திமுக போட்ட கணக்கு
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை, அதிமுகவுக்குள்ளும் உட்கட்சி பூசல் உள்ளது, பாமகவில் அப்பா-மகன் சண்டையால் பாமக வாக்கு வங்கியும் சிதறுகிறது.. இப்படியெல்லாம் சூழல் இருக்கவும் எளிதாக வென்றுவிடுவோம் என்று திமுக நினைத்தது..
ஆனால், விஜய் எதிர்க்கட்சி ஓட்டுகளை மட்டுமல்ல, திமுக ஓட்டையும் சேர்த்து உடைக்கிறார் என்பதுதான் அவரது அரசியலாக உள்ளது. திமுக வெற்றி பெறும் என்றாலும், எவ்வளவு வெற்றி பெறும் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
118 மெஜாரிட்டி நம்பர்
118 என்பது தனி மெஜாரிட்டி மேஜிக் நம்பராகும்.. ஒருவேளை 2006 தேர்தல் போல 96 வந்துவிட்டால்? திமுக 118க்கு 117 எடுத்தாலே அமித்ஷா, மோடி விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்.. எனவே திமுக வெற்றி பெறுவது பெரிதல்ல, அந்த வெற்றியை எவ்வளவு பெறப்போகிறது? எப்படி பெறப்போகிறது? என்பதுதான் முக்கியம். எனவேதான் மெஜாரிட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது திமுகவுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிர்ப்பந்தமாகும்.
அதிமுகவுக்குள் தற்போதுள்ள சூழல், திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்தான்.. ஒருவேளை ஒருங்கிணைந்த அதிமுக என்றால் அது சற்று சிக்கலையே திமுகவுக்கு ஏற்படுத்தும்..
விஜய்க்கு ஏன் கூட்டம்
விஜய்யை பொறுத்தவரை, 2 வாரங்களில் 4 மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறார்.. ஆனால் அங்குள்ள கூட்டத்தை மட்டுமே வைத்து எதையும் சொல்ல முடியாது என்று சிலர் கூறுகிறார்கள்.. இந்த கணிப்பு அன்றைய காலத்துக்கு பொருந்தியது.. ஆனால் இப்போது சோஷியல் மீடியா காலம்.. விஜய் பிரச்சாரத்துக்காக நேரில் வந்து குவியும் கூட்டத்தைவிட, சோஷியல் மீடியாவில் நேரலையில் பார்த்தவர்களின் எண்ணிக்கை, ஒரேநாளில் சில கோடிகளை தாண்டிவிடுகிறது.
உதாரணத்துக்கு 3 கோடி பேர் விஜய் பிரச்சாரத்தை நேரிலும், இணையத்திலும் பார்ப்பதாக வைத்துக் கொண்டால், அதில் 60 லட்சம் பேர் வாக்குகளாக மாறுகிறார்கள் என்றால் அது மிகப்பெரிய விஷயம்.. இதில் எதுவுமே ஓட்டாக மாறாது என்று எப்படி சொல்ல முடியும்?
விவரப்பிழை நீங்குமா
மேடைகளில் விவர பிழையுடன் விஜய் பேசினாலும், ஏன் இவ்வளவு கூட்டம் கூடுது? எனவே ஆட்சியாளர்கள் கவலைப்பட வேண்டியது விவரப்பிழைகளை கிடையாது, அந்த கூட்டத்தை பற்றிதான் கவலைப்பட வேண்டும்.
விஜய்க்காக வருபவர்கள் எல்லாருமே ரசிகர்கள் என்று எப்படி சொல்ல முடியும்? இப்படி சொல்லி சொல்லி, தங்களை தாங்களே திமுக ஏமாற்றி கொள்கிறது.. ஆட்சியாளர்கள் மீதுள்ள அதிருப்திதான், பலரை விஜய்யிடம் கொண்டு போய் நிறுத்துகிறது.. அதேபோல விவரப்பிழைகளை வைத்து, ஒரு கட்சி தலைவரை எடை போடக்கூடாது. புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு இது இயல்புதான். எனினும் தன்னுடைய பேச்சிலுள்ள விவரப்பிழைகளை விஜய் திருத்தி கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications