வைகோ மகனுக்கு செயல் தலைவர் பதவியாமே.. மறுபடியும் முதல்ல இருந்தா? என்ன நடக்கிறது மதிமுகவில்?
வைகோ மகன் துரை வைகோவுக்கு புது பதவி தரப்படும் என்ற கூறப்படுகிறது
சென்னை: துரை வைகோவுக்கு விரைவில் புது பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, மறுபடியும் மதிமுகவுக்குள் புகைச்சல் தொடங்கி உள்ளது.
துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்...
ஆனால், வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த தான், தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா? என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார்.

எதிர்ப்பு
மேலும், சில மதிமுக நிர்வாகிகள் மறைமுகமாக எதிர்ப்பையும் இதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர்.. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் துரை வையாபுரிக்கு அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லி வந்தனர்.. இந்த சூழலில்தான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.. இதையடுத்து, வைகோ மகன், துரை வையாபுரி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

வாரிசு அரசியல்
மதிமுகவிலும் வாரிசு அரசியலா என்ற விமர்சனம் பரவலாக எழ ஆரம்பித்தது.. துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்குகிறேன் என்று அறிவித்ததும் மதிமுகவில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது..

மதிமுக
இப்படிப்பட்ட சூழலில்தான், மதிமுகவின் மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் 9ம் தேதி, சென்னை தாயகத்தில் நடக்கிறது... இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் வைகோ பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது... மேலும் இதே கூட்டத்தில் விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

துணை பொதுச்செயலர் பதவியா?
அப்படி நடக்க போகும் பொதுக்குழு கூட்டத்தில்தான், தலைமை நிலைய செயலராக உள்ள தன் மகன் துரைக்கு செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலர் பதவி வழங்கவும், அதற்கேற்ற வகையில் கட்சி சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்திலேயே, துரை வையாபுரிக்குக் கட்சியில் பதவி கொடுக்கப்படும் என்ற கூறப்பட்டன..

முணுமுணுப்பு
"இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அதுவே ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும். கடந்த 56 வருடங்களாக அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன். என் மகன் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. அரசியல் என்னோடு போகட்டும். ஆனாலும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்" என்று வைகோ ஏற்கனவே தெளிவாக கூறியிருந்த நிலையில்தான், ஐ.டி.விங் பொறுப்பை வைகோ தந்திருந்தார்..

அதிருப்தி
இப்போது அடுத்த பதவி குறித்த விவகாரமும் மீண்டும் தலைதூக்கி உள்ளது. "இத்தனை வருட கால மதிமுகவில், கடந்த சில மாதங்களாக கட்சி பணி செய்த துரை மட்டும்தான் அந்தப் பதவிக்குத் தகுதியான நபரா? இத்தனை வருடமாக கட்சி பணி செய்து, எவ்வளவோ உழைத்த தகுதியான ஒரு கட்சி உறுப்பினர்கூடவா இல்லை? கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் துரை கட்சிக்குள் வருவதை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பம்தான் எல்லாம் என்று இப்போது வைகோ சொல்கிறாரே... இதேதானே திமுகவில் அவர் இருந்தபோது, ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கும்போதும் நடந்தது? என்று மதிமுகவிலேயே சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்...

ஆதரவு குரல்கள்
ஆனால், மேலும் சிலரோ, "துரை வைகோவை பொறுத்தவரை 2021 தேர்தலுக்கு முன்பிருந்தே அவர் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. மதிமுக தொண்டர்களின் வீடுகளில் நடக்கும் சுப, துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.. தந்தையின் வழியில் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்டு கொண்டு வருவதிலும் அக்கறை காட்டி வந்துள்ளார்.. எப்போதெல்லாம் வைகோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதோ அப்போதெல்லாம் அவரால் செல்ல முடியாத நிகழ்வுகளுக்கெல்லாம் துரை வையாபுரிதான் சென்று வந்தார்.. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே துரை வையாபுரியை நிற்க வேண்டும் என்று குரல் கொடுத்தோம்.. இப்போது அவருக்கு பதவி தந்தால் மகிழ்ச்சிதான்" என்றும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications