விருந்தோடு விருந்தாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை? பரபரக்கும் இந்தியா கூட்டணி.. கனிமொழி சொன்ன பதில்
சென்னை: சோனியா காந்தி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் சென்னை வந்துள்ள நிலையில், கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து கனிமொழி பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி அமைப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரை, நாடு தழுவிய அளவில் மெகா கூட்டணியாக உருவாகியுள்ள 'இந்தியா' கூட்டணியில் உள்ளது. சிறிய கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சென்னை நந்தனத்தில் இன்று நடைபெறும் திமுக மகளிரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட தேசிய அளவிலான தலைவர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு இன்று மதியம் விருந்து அளிக்கிறார் கனிமொழி எம்.பி. இந்த சந்திப்பின்போது, கூட்டணி தொடர்பான விஷயங்கள் பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் திரண்ட டாப் தலைகள்: திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 'மகளிர் உரிமை மாநாடு' இன்று மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக எம்.பி. கனிமொழி முன்னிலை வகிக்க, 9 முக்கியமான அகில இந்திய பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய பெண் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்தியா கூட்டணி: இந்த மாநாட்டில் மத்திய பாஜக அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வந்துள்ளனர்.
இன்று மதியம், சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைத்து பெண் தலைவர்களுக்கும், கனிமொழி ஏற்பாட்டில் பிரமாண்ட விருந்து அளிக்கப்படுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார். கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு குறித்தும் இந்த சந்திப்பில் பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி பங்கீடு பேச்சு?: இந்நிலையில், இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசிய அளவில் நடைபெறும் இந்த மகளிர் உரிமை மாநாடு வாக்காளர்களில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் கருத்துக்களை, எண்ணெங்களை பிரதிபலிக்கும் வகையிலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இருக்கும். இன்று நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து விவாதிக்கப்படும்" என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், இன்று 'இந்தியா' கூட்டணியின் அகில இந்திய தலைவர்கள் வந்திருக்கும் நிலையில், அவர்களுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தபடியே பதில் அளித்த கனிமொழி, "நிச்சயமாக இல்லை.. தொகுதி பங்கீடு பற்றி எந்த பேச்சுவார்த்தையும் இன்று நடக்காது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications