மனம் குளிர பாராட்டிய மாஃபா.. யார் வேணா வரலாம்.. ஓப்பனாக பேசிய சேகர் பாபு.. ஸ்டாலின் என்ன செய்வார்?
சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகளை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டியது பெரிய விவாதப்பொருளாகி உள்ளது. அதோடு மாஃபா பாண்டியராஜன் குறித்து அமைச்சர் சேகர் பாபு தெரிவித்த சில கருத்துக்களும் வைரலாகி உள்ளன.
பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி விழா ஒன்றில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார். இவருடன் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
இதில் பேசிய மாஃபா பாண்டியராஜன் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகளை பாராட்டினார்.

கோவில் நிலம்
கோவில் நிலங்களை எல்லாம் அரசு வேகமாக மீட்டுள்ளது. அன்பு சகோதரர் சேகர் பாபு கோவில் நிலங்களை வேகமாக மீட்டு இருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டார். இதை மேடையில் இருந்த சேகர் பாபு சிரித்தபடி கேட்டுக்கொண்டு இருந்தார்.

சேகர் பாபு
இதன்பின் பேசிய சேகர் பாபு, எதிர்கட்சித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள் பாராட்டும் வகையில் நமது அரசு உள்ளது என்று குறிப்பிட்டார். இதையடுத்து அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், மாஃபா பாண்டியராஜன் உங்கள் துறையை பாராட்டி உள்ளார். அவர் திமுகவிற்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டனர்.

வரலாம்
இதற்கு பதில் அளித்த சேகர் பாபு, யார் வேண்டுமானாலும் திமுகவில் இணையலாம். முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திமுகவிற்கு வருவது பற்றி முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார், என்று குறிப்பிட்டார். இந்த பேட்டியை தொடர்ந்து இணையம் முழுக்க மாஃபா பாண்டியராஜன் திமுகவில் இணைவது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

வலதுசாரி
அதன்படி மாஃபா பாண்டியராஜன் திமுகவில் சேர போகிறாரோ என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதேபோல் மாஃபா வந்தால் முதல்வர் அவரை ஏற்றுக்கொள்வாரா என்று பலர் கேட்டுள்ளனர். ஏனென்றால் மாஃபா பாண்டியராஜன் கொஞ்சம் வலதுசாரி கொள்கை கொண்டவர். பாஜகவிற்கு நெருக்கம் ஆனவர். அவர் திமுக வர வாய்ப்புகள் குறைவு.

ஸ்டாலின்
ஒருவேளை திமுகவிற்கு வந்தால் கூட அவரை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் கடந்த ஆட்சியில் மாஃபா பாண்டியராஜன் செயல்பாடுகளை ஸ்டாலின் மற்றும் இதர திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். நீட் தேர்வு செய்து மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த சில கருத்துக்கள், இரு தரப்புக்கும் இடையே மோதலை உண்டாக்கியது.

பாராட்டு
இப்படி இருக்கையில் முதல்முறை மாஃபா பாண்டியராஜன் திமுக அரசின் கீழ் உள்ள ஒரு துறை குறித்து பாராட்டி பேசி உள்ளார்.இதனால் மாஃபா பாண்டியராஜன் திமுகவிற்கு வரும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்வார்? மாஃபா பாண்டியராஜனை கட்சிக்குள் சேர்த்துக்கொள்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications