ரூ 41 லட்சம் மோசடி வழக்கு.. கைதாகிறாரா நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி? பாஜகவில் சலசலப்பு
சென்னை: ரூ 41 லட்சம் மோசடி வழக்கில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரியை கைது செய்து விசாரணை நடத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் நமீதா. குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்த இவர் எங்கள் அண்ணா, பில்லா, ஜகன் மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

குஷ்புவுக்கு கோயில் கட்டியது போல் கோவையில் நமீதாவுக்கும் 2008ஆம் ஆண்டு அவருடைய ரசிகர்கள் கோயில் கட்டினர். கடந்த 2010 ஆம் ஆண்டு திருச்சியில் ரசிகரால் நமீதாவை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு திருச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இவர் வீரேந்திர சவுத்ரி என்ற தொழிலதிபரை 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
கட்சியில் சேர்ந்த 8 மாதங்களில் இவர் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது நமீதா வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜகவுக்கு கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதே வேளையில் தமிழகத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இந்த நிலையில் நமீதாவின் கணவர் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அவர் MSME ப்ரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் தமிழக தலைவராக உள்ளார். அதாவது சிறு குறு நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி ரூ 41 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக சேலம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் புகார் அளித்துள்ளார்.
அந்த வழக்கில் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துவிட்டனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி நமீதாவின் கணவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் தற்போது வரை ஆஜராகவில்லை என்பதால் அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications