ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் ‘ஸ்கெட்ச்’.. சட்டென வந்து விழுந்த வார்த்தை.. அப்போ.. இறுதி முடிவு இதானா?
இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என்பதை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளது ஓபிஎஸ் தரப்பு.
சென்னை : இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவோம் என அறிவித்து வேட்பாளரை வாபஸ் பெற்றோம், ஆனால் அதற்கான எந்த மரியாதையும் அவர்கள் கொடுக்கவில்லை. மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது, வாக்கு எண்ணிக்கையின் போது அது தெரியவரும் எனப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளரை களமிறக்கிய நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவின்படி பொது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, ஓபிஎஸ் தனது அணி வேட்பாளரை வாபஸ் பெற்றார். தொடர்ந்து இரட்டை இலை சின்னம் வெற்றி பெற உழைப்போம் என ஓபிஎஸ் அறிவித்தார். இதனால், அவர் பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.

ஈரோட்டில் இரட்டை இலை
எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் மேற்கொள்வேன் என ஓ.பன்னீர்செல்வம் முன்பு அறிவித்திருந்தார். ஆனால், அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பிலிருந்தும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பு அனுப்பிய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் ஏற்கப்படவில்லை. இதனால், ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ஓபிஎஸ்ஸை புறக்கணித்த ஈபிஎஸ், பாஜக
இது குறித்துப் பேசிய ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், "பிரச்சாரம் என்பது ஈரோட்டிற்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. காணொளி வாயிலாகவும் மேற்கொள்ளலாம்" எனக் கூறி இருந்தார். அண்மையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக நடத்திய பாராட்டு விழாவில் பாஜக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், பாஜகவும் ஓபிஎஸ் தரப்பை புறக்கணித்து விட்டதாகப் பேச்சுகள் எழுந்தன.

ஓபிஎஸ் பரபர
இந்நிலையில் தான் இன்று ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பிரச்சாரத்தில் தன் பங்கு என்ன என்பது குறித்தும் ஓபிஎஸ் முடிவு செய்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் அணி, அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு அளிக்கும் என்பது போன்ற எந்த அறிவிப்பையும் ஓ.பன்னீர்செல்வம் வெளியிடவில்லை.

ஓபிஎஸ் சூசகம்
அதேசமயம், சூசகமாக சில விஷயங்களைப் பேசியுள்ளார் ஓபிஎஸ். வேட்புமனுவை வாபஸ் பெற்று இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. வேட்புமனுவை வாபஸ் பெற்று, இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். அதற்கான எந்த மரியாதையும் அவர் கொடுக்கவில்லை. மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது, அது கூடிய விரைவில் வரும். வாக்கு எண்ணிக்கையின் போது அது தெரியவரும்." எனப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதன் மூலம், அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியைச் சந்திப்பார், அவருக்கு எங்கள் ஆதரவு இல்லை என்றே ஓபிஎஸ் மறைமுகமாகக் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

தாறுமாறு விமர்சனம்
மேலும், எடப்பாடி பழனிசாமி உடனான சமாதான முயற்சிகள் பலிக்காததால் மீண்டும் ஈபிஸ் தரப்பை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார் ஓபிஎஸ். சர்வாதிகாரத்தின் உச்சத்திற்கு சென்று அதிமுக சட்டவிதியை எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர், எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை, அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார். கொடூரமான புத்தியை வைத்துக்கொண்டு இயக்கத்தை நடத்தி வருகின்றனர் என தாறுமாறாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசியுள்ளார் ஓபிஎஸ்.

அப்போ கன்ஃபார்ம்?
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். ஆக, ஓபிஎஸ் தரப்பு இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications