தமிழ்நாட்டில் "அதுக்கு" வாய்ப்பே இல்லை.. இப்பவே நாங்க டெல்லி போறோம்".. திமுக அமைச்சர் அதிரடி.. ஏன்?
ஒரே நாடு ஒரே பதிவு தமிழகத்தில் சாத்தியமில்லை என்கிறார் திமுக அமைச்சர்
சென்னை: மத்திய அரசு அறிவித்த ஒரே நாடு ஒரே பதிவு திட்டம் குறித்து திமுக அமைச்சர் மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.. அமைச்சரின் இந்த கருத்தின் மீதான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் அலசப்பட்டு வருகின்றன.
கடந்த பிப்ரவரியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தின் கீழ் மாநில பதிவு தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.. அதேசமயம், ஒரே நாடு ஒரே பதிவு திட்டம் என்பது சாத்தியமா என்பது குறித்தும் பொருளாதார நிபுணர்கள் அலச ஆரம்பித்தனர்.

டிஜிட்டல் முறை
கடந்த 2008-09-ல், இந்தியாவில் வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்காகவும், நில ஆவணங்களை டிஜிட்டல் மற்றும் நவீனமயமாக்கவும், டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தை மத்திய அரசு அப்போது கொண்டு வந்தது.. இதன்மூலம், டிஜிட்டல் முறையில் நில அளவீடு செய்து, நில உரிமை விபரங்களை பதிவு செய்தல், ஊரக பகுதி நிலப்பதிவேடுகள் கணினிமயமாக்குதல் போன்ற எத்தனையோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நில ஆவணங்கள்
இதையடுத்து, 2016-ல் டிஜிட்டல் இந்திய நில ஆவணங்களை நவீனமயமாக்கல் திட்டம் என்று மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதற்கான 100% விழுக்காடு நிதியை மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது-. இதன் கீழ், நாடு முழுவதும் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவுக்காக "ஒரே தேசம், ஒரே மென்பொருள்" என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது...

நிர்மலா சீதாராமன்
இப்போதைக்கு மணிப்பூர், மகாராஷ்ரா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒரே வகையான மென்பொருள் மூலம் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவு செய்யப்பட்டு வருகின்றன... அதன் தொடர்ச்சியாகத்தான், ஒரே நாடு ஒரே பதிவுமுறை கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது பட்ஜெட்டின்போது அறிவித்திருந்தார்.

சாத்தியமா?
ஆனால், இது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. காரணம், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு நல்ல முயற்சி தான் என்றாலும், இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில், பல மாநிலங்கள் நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து சொல்கிறார்கள்.. எனவே, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள, ஒரே நாடு; ஒரே பத்திரப்பதிவு திட்டம் சாத்தியமாகும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வாய்ப்பில்லை
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த திட்டம் சாத்தியமாகாது என்று ணவணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது சொன்னதாவது: "ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த வாய்ப்பு இல்லை... ஜிஎஸ்டி இழப்பீடு பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையுடன் தமிழக நிதியமைச்சர், அதிகாரிகள் குழுவுடன் விரைவில் டெல்லி செல்கிறோம்... பதிவுத்துறை உயர் அலுவலர்கள் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை மீறி சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யும் சார் பதிவாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருத்தங்கள்
மோசடியாக பதியப்படும் பத்திரங்களை ரத்து செய்யவும், தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் சட்ட முன்வடிவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்துள்ளது.. அவர்கள் தெரிவித்த சில திருத்தங்களை செய்து கோப்பு மறுபடியும் அனுப்பப்பட்டுள்ளது.. அதற்கு கூடியசீக்கிரம் ஒப்புதல் கிடைத்துவிடும்.. அதற்கு பிறகு, எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் பதிவுத்துறையில் தவறுகள் பெருமளவில் தடுக்கப்படும்.

சிறை தண்டனை
சார் - பதிவாளர்கள் தவறு நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்... பத்திரப்பதிவில் வழிகாட்டுதல் மதிப்பை விட, குறைவாக பதிவு செய்யக்கூடாது. மனை இடத்தை காலி இடமாக பதிவுசெய்து, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கடந்த பிப்ரவரி வரையில் மட்டும், பதிவுத்துறையில் ரூ.12,700 கோடி, வணிகவரித் துறையில் ரூ.93,700 கோடி வருவாய் கிடைத்துள்ளது... இந்த மார்ச் மாதத்துக்குள் பதிவுத்துறை மூலம் ரூ.13,500 கோடியும், வணிகவரித் துறை மூலம் ரூ.1.05 லட்சம் கோடியும் வருவாய் கிடைப்பது உறுதி" என்றார். அமைச்சரின் இந்த பேச்சு விவாதங்களையும், அலசல்களையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications