வாய்ப்பில்லை ராஜா.. விஜயின் தவெக கூட்டணிக்கு நோ சொன்ன பாமக! தயங்கும் தேமுதிக! இது தான் காரணமா?
சென்னை: திமுகவுக்கு - தவெகவுக்கு தான் போட்டியே என்ற முழக்கத்தோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் நடிகர் விஜய். அவருக்கும், அவரது கட்சிக்கும் இதுதான் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. ஆனால், அவருக்கான கூட்டணி அமையுமா? என்பது தான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி.
திமுக கூட்டணியில் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடரும் காங்கிரஸ் கட்சி. தற்போது தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை கூறப்படுகிறது. ஆனால் இது கூட்டணி பேரத்தை அதிகரிக்கும் முயற்சி எனவும் விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
மறுபுறம் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஆன கூட்டணியை இறுதி செய்துவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய்
இந்த சூழ்நிலையில், பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' கூட்டணியில் இணையுமா என்பது தற்போது முக்கியமான அரசியல் கேள்வியாகியுள்ளது. தற்போதைய தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த இரு கட்சிகளும் தவெக கூட்டணியில் சேர்வதற்கு சில பெரிய தடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதல் சிக்கல் தொகுதி பங்கீடு தொடர்பானது. பாமக பெரிய அளவில் தொகுதிகள் வேண்டும் என்று விரும்புகிறது. ஏற்கனவே மாநில அளவில் தங்களுக்கான வாக்கு வங்கி உள்ளது என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.
தமிழக வெற்றி கழகம்
அதே நேரத்தில், விஜய் தனது கட்சிக்கே அதிக தொகுதிகள் வேண்டும் என்றும், தாமே முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் நினைக்கிறார். இதேபோல், 'முதலமைச்சர் வேட்பாளர்' என்பதிலும் முரண்பாடு இருக்கிறது. விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வருகிறார். ஆனால் பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த இரு நிலைப்பாடுகளும் ஒரே கூட்டணியில் இணைவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேமுதிக
தேமுதிக தரப்பிலிருந்து பார்க்கும் போது, அந்தக் கட்சியின் வாக்கு வங்கி கடந்த தேர்தல்களிலிருந்து குறைந்துவிட்டது என்ற மதிப்பீடு உள்ளது. உண்மையும் அது தான். எனவே, அவர்கள் தங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், அங்கீகரத்துக்காகவும் பெரிய கூட்டணியில்தான் இணைவார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
விஜய்யின் கட்சி புதிய கட்சியாக இருப்பதால், அதில் இணைவது குறித்து தேமுதிக இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், விஜய் தொடர்ந்து ஊழலற்ற அரசியல், சுத்தமான நிர்வாகம், பழைய அரசியல் நடைமுறைகளுக்கு மாற்றாக தன்னை முன்வைத்து வருகிறார். ஒழுங்குமுறை இல்லாத அரசியல் நடைமுறைகளை எதிர்த்து பேசுகிறார். இதனால், ஏற்கனவே பல கூட்டணிகளில் இடம்பிடித்து வந்த கட்சிகளுடன் இணைவது, தனது புதிய அரசியல் பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்று விஜய் நினைக்கக்கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
2026 தேர்தல் கூட்டணி
அதோடு, பாமக போன்ற கட்சிகளின் சாதி அடையாள அரசியல், விஜய்யின் 'சமத்துவ அரசியல்' என்ற பிரசாரத்திற்கு முரணாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதுவும் கூட்டணிக்கான முக்கியத் தடையாக பார்க்கப்படுகிறது. இந்த எல்லா காரணங்களாலேயே, ஆரம்ப கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், அதிகாரப்பூர்வ கூட்டணியாக மாறுவது குறித்து தெளிவான முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் அரசியல் சூழ்நிலை எப்படி மாறுகிறது என்பது தான் முக்கியம்.












Click it and Unblock the Notifications