பரம வைரிகள்.. பாமகவும், தேமுதிகவும்.. மீண்டும் ஓரணியில் இணைவார்களா??
சென்னை பரம வைரிகளான பாமகவும், தேமுதிகவும் மீண்டும் ஓரணியில் கை கோர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகராக உச்சத்தில் இருந்த விஜயகாந்த் சில சமூக பங்களிப்புகளை செய்யும்போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என்று தொடர்ந்து கூறிவந்தார். அப்போதெல்லாம் அனைத்திற்கும் எதிர்வினையாற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயகாந்தையும் கடுமையாக எதிர்த்தார். தொடர்ந்து அவரை வசைபாடி வந்தார்.
இதனால் கோபம் கொண்ட விஜயகாந்த் தனது கட்சி ஆரம்பிக்கும் பணிகளை விரைந்து செய்தார் என்றுகூட செய்திகள் உண்டு. கட்சி ஆரம்பித்த பின்னர் 2006- ம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டார். இதில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி கண்டார். இந்த தேர்தலை பொருத்தமட்டில் பாமகவின் வாக்கு வங்கியான வன்னியர் வாக்குகள் பெரும்பாலும் விஜயகாந்த் கட்சிக்கு விழுந்தன.

பாமக வாக்கு வங்கி
2006- ம் ஆண்டில் முதன் முதலில் பாமகவின் வாக்கு வங்கியில் கை வைத்த விஜயகாந்த் பின்னர் அதை தொடர்ந்து அடுத்து வந்த அத்தனை தேர்தல்களிலும் பாமகவுக்கு அவர்களின் அடித்தள வாக்கு வங்கியான வன்னியர் வாக்கு வங்கியில் கடும் சேதத்தை ஏற்படுத்தினார். இதுவே இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுக்க அடிப்படை காரணம்.

கடும் கோபம்
கட்சி நடத்தும் ஒரு நடிகர் என்னைப் பற்றியும், பாமக குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். அரசியலில் அரிச்சுவடி கூட படிக்காத அந்த நடிகருக்கு என்னைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது என்று விஜயகாந்தை வர்ணித்து அவரது பெயரைக் கூட தான் உச்சரிக்க விரும்பவில்லை என்று காட்டிக்கொண்டார் ராமதாஸ்.

கடும் மோதல்
தலைவர்களுக்கு இடையேயான இந்த மோதல் பாமக தொண்டர்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையேயான மோதலாக பல்வேறு இடங்களில் வெடித்ததும் உண்டு. அப்படிப்பட்ட நிலையில் 2014 - ல் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் பரம எதிரிகளான பாமகவும், தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணைகிறது. இதற்கு தமிழருவி மணியன், பாஜக போன்ற பலருடைய லாபியும் ஒரு காரணமாக அமைந்தது.

தேமுதிகவுடன்
வழக்கமாக தேர்தல் தோறும் அணியை மாற்றும் ராமதாஸ் அழகாக அதற்கு ஒரு காரணத்தையும் கூறுவார், தான் விரும்பும் சீட்டுகளையும் பெற்றுக் கொள்வார். ஆக தேர்தல் வியாபாரத்தில் ராமதாசுக்கு எப்போதுமே கொள்முதலாகவே சீட்டுகள் அமைந்தது வரலாற்று உண்மை. ஆனால் 2014 -நாடாளுமன்ற தேர்தலை பொருத்தமட்டில் பாஜக அணியில் தேமுதிகவை விட குறைவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. அரசியலில் தேமுதிகவை விட பெரியண்ணன் ஆகிய பாமக இந்த தேர்தலில் அவர்களை விட குறைந்த இடங்களில் போட்டியிட ஒத்துக்கொண்டது.

உள்ளுக்குள் குழப்பம்
தேசியமும் வேண்டாம், திராவிடமும் வேண்டாம் என்று பிரகடனப்படுத்திய ராமதாஸ், தன்னைப்பற்றி பேச எந்த நடிகருக்கு அருகதை இல்லையென்று பேசினாரோ அந்த நடிகருடனேயே கூட்டணியும் வைத்துக் கொண்டது வரலாற்றின் வைர வரிகளில் பொறிக்க வேண்டியவை. 8 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக தர்மபுரியில் வென்றது. இந்த தேர்தலில் தேமுதிக பாமகவின் வெற்றிக்க உழைத்தது. ஆனால் சேலத்தில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிகவின் முக்கிய நிர்வாகியுமான சுதிஷ் தோல்வியை தழுவினார். அதற்கு பாமக தங்களுக்காக தேர்தல் வேலை செய்யவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியது தேமுதிக. நாங்கள் அவர்களுக்காக உண்மையாக உழைத்தோம் ஆனால் அவர்கள் எங்களுக்கு துரோகம் இளைத்து விட்டனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் பிரேமலதா விஜயகாந்த்.

அன்புமணியின் விமர்சனம்
அதன் பினனர் வந்த 2016- சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறி அன்புமணியை முதல்வர் வேட்பாளராக் களம் இறக்கியது பாமக. ஆனால் ஒரு இடத்தில் கூட தேறவில்லை. அந்த தேர்தல் சமயத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது எவ்வளவு முக்கியமான பதவி, ஆனால் விஜயகாந்தோ சட்டமன்றம் செல்லமாட்டார், பத்திரிக்கையாளர்கள் கேட்டால் நான் இரண்டு மாதமாக பேப்பரே படிக்கவில்லை என்று கூறுவார். இவர்களால் இந்த மாநிலம் எப்படி வளர்ச்சி பெறும் என்று பேட்டி தட்டினார் அன்புமணி.

மீண்டும் கூட்டணியா
பின்னர் தேர்தல் அணிகள் குறித்து பேட்டியளித்த அன்புமணி ஒரு மனிதர் ஒரே நேரத்தில் காங்கிரசோடு பேசுகிறார், காங்கிரசின் எதிரி கம்யூனிஸ்ட்களோடு பேசுகிறார், கம்யூனிஸ்ட்களின் எதிரி பாஜகவோடும் பேசுகிறார் இப்படிப்பட்டவரை தலைவர் என்று எப்படி கூறமுடியும், தலைவர் என்பவருக்கு நான்கு பேர் பின்பற்றுகிற ஆளுமை வேண்டும் என்றெல்லாம் கூறினார் அப்போதைய பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.

மாறிய காட்சிகள்
2016 -தேர்தல் முடிந்து ஆண்டுகள் இரண்டு கடந்து விட்டது. காட்சிகள் மாறியுள்ளன. திமுக அதிமுக இரண்டும் ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும் என்று கூறிய அன்புமணி திமுக, அதிமுக கட்சிகளுடன் பாமக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்கிறார். பெயரையே உச்சரிக்க தயங்கிய நடிகரோடு மீண்டும் கூட்டணி அமைக்கப் போகிறது பாமக. ஆக அரசியலில் அரங்கேறும் வார்த்தை வியாபாரத்திற்கு அந்தந்த நேரத்தில் மட்டும்தான் விலை போலிருக்கிறது.












Click it and Unblock the Notifications