ஸ்டாலின் யு.எஸ் செல்லும் முன்.. வரப்போகும் கிளைமேக்ஸ்? ஆனால் உதயநிதிக்கே விருப்பம் இல்லையா? ஏன்?
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வருகின்றன. இதில் முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படலாம் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக கூட்டத்தில் என்னவெல்லாம் பேசப்படும்.. என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்று இங்கே பார்க்கலாம்.
வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உதயநிதியை துணை முதல்வராக்க முன்மொழியப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. உதயநிதியை துணை முதல்வராக்க சிலர் முன்மொழியலாம், தீர்மானம் போடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் முடிவு எட்டப்படாது. ஸ்டாலின் அப்படியெல்லாம் வேண்டாம் என்று சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பார்மாலிட்டியாக நடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி மனநிலை என்ன?: உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளாராம். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லையாம்
தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்நாள்தான் நடந்தது. இதிலும் துணை முதல்வர் பதவி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை. உதயநிதி அமைச்சரான பிறகு அவரில்லாமல் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது தான். வெளிநாட்டில் இருந்ததால் அவர் வரவில்லை. ஏற்கனவே போடப்பட்ட பயணத் திட்டம் என்பதால் அதை ரத்து செய்துவிட்டு திரும்ப முடியவில்லை.
இதனை முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி தெரிவித்து விட்டார் என்கிறார்கள். இந்த அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர்களிடம் தனி தனியாக 15 நிமிடம் மட்டுமே பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் பதவி உள்ளிட்டவைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனை செய்யவிருக்கிறார் என்று பரவலாக சொல்லப்பட்டது. ஆனால், இது குறித்த எந்த விவாதமும் அங்கு நடக்கவில்லை.
வெளிநாட்டு பயணம்: தனது வெளிநாடு பயணத் திட்டம் பற்றி மட்டுமே முதல்வர் வெளிப்படுத்தினார். அதுவும் அட்வைஸ் பண்ணுகிற தொணிதான் இருந்தது. எங்கிருந்தாலும் எனது சிந்தனையும் நினைப்பும் உங்களைச் சுற்றியும் தமிழகத்திலும் தான் இருக்கும் என உணர்வுபூர்வமாகச் சொன்னார் என்கிறார்கள் நாம் பேசிய அமைச்சர்கள் தரப்பில்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன் துணை முதல்வர் பதவி பற்றி முடிவு எடுக்கப்படுமா.. தமிழ்நாட்டில் விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications