அதிமுக கூட்டணி முறிவா? அண்ணாமலை அவசர ஆலோசனை.. பாஜக நாளை அறிவிக்கும் முக்கிய முடிவு?
சென்னை: அதிமுக உடன் கூட்டணி முறிந்துவிட்டதா என்பதை பாரதிய ஜனதா கட்சி நாளை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜக மூத்த தலைவர்களுடன் மாநில தலைவர் அண்ணாமலை தொலைப்பேசியில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேரறிஞர் அண்ணா குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு பாஜக - அதிமுக கூட்டணியில் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாவைப் பற்றி அவதூறு பேசினால் அண்ணாமலையின் நாக்கு துண்டாகிவிடும், நாக்கு அழுகிவிடும் என்று கூறினார்.

இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசும் போது, அண்ணாமலை தனது போக்கை மாற்றிக்கொள்ளுங்கள் அண்ணாமலை. இனியும் எங்களை வாழவைத்த தலைவர்களை பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள 'நானும் ரவுடிதான்' என வடிவேல் சொல்வதைப்போல நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார்.
அதற்காக எங்கள் தலைவர்களை இழிவுபடுத்த வேண்டாம்.இந்தக் கூட்டணியை முறிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார். இதேபோல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தால், ஒருமுடிவை எடுக்க வேண்டும் என எங்கள் தலைமையை நாங்கள் கண்டிப்பாக வலியுறுத்துவோம் என்றார்.
இதனிடையே ஜெயக்குமார் பேசும் போது, கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டர்கள் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால், அது திமிர் பிடித்து ஆடுமாம். வீட்டில் உள்ள பண்டபாத்திரங்களை எல்லாம் கொத்துமாம். சிட்டுக்குருவிகளுக்கே உள்ள புத்தி அது.
அதுபோல், தகுதிக்கு மீறிய பதவி, அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எதற்காக விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அங்கு சென்று கிளறினால்தான், இவரைப் பற்றி உண்மைகள் தெரியும். ஒரு அரசியல் தலைவருக்கே லாயக்கில்லாத, பாஜக தலைவருக்கே லாயக்கில்லாத, சிறுமைபுத்திக் கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அண்ணாமலை தொடர்ந்து. அதிமுக என்பது ஒரு சிங்கக் கூட்டம். அதை பார்த்து, சிறு நரி அண்ணாமலை ஊளையிடுகிறது. ஊளையிடும் இந்த சிறு நரி தனியாக சென்று நிற்கட்டும்.
நோட்டாவுக்கு கீழே அண்ணாமலை வாக்குவாங்குவாரே தவிர, நோட்டாவைத் தாண்டமாட்டார். அப்படியிருக்கிறது அண்ணாமலையின் செல்வாக்கு. பெரியார், அண்ணா குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது? அதிமுக பொதுச் செயலாளர்,ஜெயலலிதா, எம்ஜிஆர், குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?
எனவே, தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக, கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்து முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அதை ஒருகாலும் அதிமுக தொண்டன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்திலும் புகார் செய்துவிட்டோம். என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, இவரை திருத்த வேண்டும், இதுபோல அவரை பேச வேண்டாம் என்று கூறிவிட்டோம். கூட்டணியில் இருக்கும்போது அண்ணாமலை இவ்வாறு பேசினால், தேர்தல் நேரத்தில் எப்படி தொண்டர்கள் வேலை செய்வார்கள்? பாஜக தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை.
அவர் விரும்பாத சூழலில், இதுபோன்ற கருத்தைக் கூறி, எங்களுடைய தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு அண்ணாமலை வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? பாஜகவினரை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? உங்களை யாராவது சுமக்கத்தான் வேண்டும்.
உங்களுக்கே காலே கிடையாது. அண்ணாமலைக்கு காலே கிடையாது. பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது. எந்தளவுக்கு பாஜகவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரியும். அதிமுகவை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. ஒரு தன்மானமுள்ள தொண்டன் அண்ணாமலையின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலிடத்திலும் அண்ணாமலை குறித்து புகார் அளித்தாகிவிட்டது. திரும்பத்திரும்ப இதுபோல பேசினால், இனியும் பொறுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை.
எனவே, பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும்" என ஜெயக்குமார் எச்சரித்தார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்த பின்னர் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கோவையில் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டணிக்காக எங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அண்ணா பெயரில் கட்சியை வைத்து உள்ள நாங்கள் எப்படி அண்ணாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்வோம் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார். அண்ணா குறித்த வரலாற்றை திரித்து பொதுவெளியில் பேசுவது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல என்றும் கூறினார்.
இந்த நிலையில், பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை நாம் அறிவித்துவிட்டோம் இனி பாஜக மாநில தலைவர் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை அதிமுக நிர்வாகிகள் சிலர் மறுத்தும் உள்ளனர்.
இதனிடையே அதிமுக உடன் கூட்டணி முறிந்துவிட்டதா என்பதை பாரதிய ஜனதா கட்சி நாளை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச் ராஜா, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தொலைப்பேசியில் இன்று ஆலோசனை நடத்தினார். பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று அறிவித்ததற்கு பாஜக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.. இந்த சூழலில் நாளை பாஜக அதிமுக கூட்டணி முறிந்துவிட்டதா என்பதை அறிவிக்கும் என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications