பாஜக ‘100’ சீட் தாண்டாது ஏன்? … ‘இந்தியா’ கூட்டணியின் பலம் என்ன? ..2024 தேர்தல் பரபர கணிப்புகள்…
சென்னை: பல கட்சிகளின் எதிர்காலத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் முடிவு செய்யப் போகின்றது. ஆகவே இந்தத் தேர்தல் பலருக்கும் வாழ்வா? சாவா? போராட்டமாக மாறி இருக்கிறது.
இதில் விநோதம் என்னவென்றால் பாஜகவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போவதும் இந்தத்தேர்தல்தான். இதில் பாஜக சறுக்கினால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 15 ஆண்டுகளாகும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

இப்போதைக்கு 'இந்தியா' கூட்டணி தென்னிந்தியாவில் அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது. 'திராவிட மண்ணிலிருந்து பாஜக அகற்றப் பட்டது' என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது 100 சதவிகிதம் உண்மையாகி இருக்கிறது.
வட இந்தியா என எடுத்துக் கொண்டால், பஞ்சாப், மேற்குவங்கம், பீகார், மகாராஷ்டிரா, மணிப்பூர், டெல்லி எனப் பல மாநிலங்களில் பாஜகவின் வானிலை நிலவரம் நன்றாக இல்லை.

குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் தவிர, பாஜக பலம் நிறைந்த மாநிலங்கள் இந்தியாவில் வேறு எங்கேயும் இல்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் பிராந்திய கட்சிகளை நம்பியே அதன் வெற்றி வாய்ப்பு உள்ளது.
அதுவும் காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி உதயமான பிறகு, பல மாநிலங்களில் பாஜகவின் நிலை பலவீனமாகவே உள்ளது. குறிப்பாகத் தென்னிந்தியா முழுக்க பாஜகவின் தடமே தெரியவில்லை.

அதுவும் தமிழ்நாட்டில் அதிமுகவைத் தவிர, பாஜக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இல்லாத கட்சிகள். ஆக, இதை எல்லாம் வைத்து ஒரு தேர்தல் கணக்குப்போட்டுச் சொல்ல முடியுமா? என்று பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர் செல்வனிடம் கேட்டோம். அவர் கூட்டிக் கழித்துப் பார்த்துச் சொன்ன தகவல்களை அப்படியே தந்திருக்கிறோம்.
"வருகின்ற 2024இல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது. ஆனாலும், இப்போதே கூட்டணி அமைப்பதற்கான வியூகமும், இணைந்து ஒற்றுமையாகச் செயல்படுவதற்கான செயல்திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் உருவாகியுள்ளது ரொம்ப ரொம்ப முக்கியமான விசயமாக நான் பார்க்கிறேன்.

எதிர்க்கட்சிகளுக்குள் இருக்கின்ற பல்வேறு முரண்பாடுகளை அடையாளம் கண்டு அதைச் சரிசெய்து கொள்ளுவதற்கான நிறையக் கால அவகாசம் இருப்பதால், கூட்டணியை இன்னும் அது வலுப்படுத்த உதவும் என்றும் நான் நம்புகிறேன். இந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் மக்களின் முன்பாக எடுத்துவைக்கும் விசயம் மிகமிக வெளிப்படையாக இருக்கிறது.
உதாரணமாக, இந்த 'இந்தியா' கூட்டணி என்ன சொல்கிறது என்றால் 'நாங்கள் அனைவரும் ஒன்று அல்ல; எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கடந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படைக் காரணத்திற்காக நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.
குறிப்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமான நாட்டின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்' என்று அவர்கள் வெளிப்படையாக பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆகவே, இந்த 'இந்தியா' கூட்டணியில் வேற்றுமை என்பது பெரிய விசயமே இல்லை. அவர்கள் ஒன்றிணைவதற்கான விசயங்கள் என்ன என்பதைப் பற்றித்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் ஒன்றிணைந்ததன் மூலம் கிடைத்துள்ள வெற்றியை நாம் வெளிப்படையாகக் காண்கிறோம். நாடாளுமன்றமே முடங்கிப் போய் இருக்கிறது.
இந்த எதிர்க்கட்சிகளின் பலமான ஒற்றுமையால்தான் இன்றைக்கு இரண்டு அவைகளையும் ஒத்திவைக்கவேண்டிய சூழல் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியால் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை தீவிரமாகி இருக்கிறது.
குறிப்பாக 2019க்குப் பிறகு வந்த ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் 30 முதல் 40 மசோதாக்கள் எந்தவிதமான விவாதங்களும் இல்லாமல் நிறைவேற்றிய வரலாற்றுக்குச் சொந்தமானது நமது இந்தியா.

ஆனால், அந்த நாடாளுமன்றம் இன்றைக்கு நடத்தவே முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், அவர்களின் ஒற்றுமை. இதுவே பாஜக ஆட்சியில், மீண்டும் ஜனநாயகத்தை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள முயற்சிக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றியாகவே இதைப் பார்க்கிறேன்.
நெருக்கடிக்காலத்தில் நம் முன்னால் இருந்த முதல் கோரிக்கை என்ன, நாட்டின் ஜனநாயகத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது. 'என்.டி.ஏ ஒன்று' ஆட்சி முடிந்த பிறகு நம் முன்னால் இருந்தது என்ன? ஏதாவது ஒருவகையில் மாநிலங்களின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்பது.
ஆனால், இப்போது நம் முன்னால் இருப்பது என்ன? 'இந்தியா' என்ற கருத்தாக்கத்திற்கே மிகப் பெரிய அச்சுறுத்தல் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் மணிப்பூரில் நடைபெற்ற ஒரு கலவரத்தினால் ஏற்பட்டதல்ல, அல்லது புல்வாமா தாக்குதலால் ஏற்பட்டதல்ல.

ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலம் ஒரு நாள் காலை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுகிறது. ஒன்றிய அரசு அந்தளவுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைப் பிரிக்கிறது. இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கே இதனால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கூட INDIA VS NDA என்பதில் NDA என்பதை National defenders of adani என்று புதிய விளக்கத்தை முன்வைத்து வருகிறார்கள். அது மிக அழகாக இருக்கிறது. ஆகவே, எப்படிப் பார்த்தாலும் Nda மீதான விமர்சனங்கள் கூர்மை அடைந்திருக்கிறது.
பல மாநிலங்களில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் பலம் பெற்று வருகின்றன. உதாரணமாக தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி பலமானதாக இருந்தது. ஆனால், விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கான முழு பலத்துடன் இருக்கிறது.
அதேபோல இடதுசாரிகள் 'இந்தியா' கூட்டணியில் இருப்பதால், கேரளாவில் அந்தக் கூட்டணி பலம் பெற்றுவிடுகிறது. தமிழ்நாட்டில் திமுகதான் ஆளும் கட்சி. அது 'இந்தியா' கூட்டணியில் இருப்பதால் இந்த மாநிலத்திலும் 'இந்தியா' கூட்டணிக்கு இயல்பாகவே பலம் கூடியுள்ளது. அதைப்போலக் காங்கிரஸ்தான் இப்போது கர்நாடகாவில் ஆளும் கட்சி.
ஆக, அங்கேயும் 'இந்தியா' பலம் பெறுவது இயற்கை. இதில் வராமல் இருப்பது ஆந்திரா மட்டும்தான். அங்கே யாரை அழைப்பது என்பதில் தடுமாற்றம் நிலவுகிறது. சந்திரபாபு நாயுடுவை அழைப்பதா? ஜெகன்மோகன் ரெட்டியை அழைப்பதா? அதிலும்கூட ஜெகன்மோகன் சகோதரி மீண்டும் காங்கிரசுடன் இணைந்துவிட்டார்.
ஆகவே, அங்கே போட்டி ஜெகன்மோகனா? அல்லது சந்திரபாபு நாயுடுவா? என்பதுதான் போட்டி. அங்கே பாஜக என்ற கட்சிக்கு இடமே இல்லை. ஆகவே அதுவும்கூட 'இந்தியா' கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.
ஒருவேளை இரண்டு பேர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றாலும் அவர் பாஜக கூட்டணிக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. காரணம், வரும் தேர்தலில் பாஜக 100 இடங்களைத் தாண்டாது என்றே பலரும் கணித்து வருகிறார்கள்.
எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்றால், வாஜ்பாய்- அத்வானி காலத்தில் என்.டி.ஏ. கூட்டணி அடைந்த தோல்வியைவிட, இந்தத் தேர்தலில் மோடி- அமித்ஷாவின் என்.டி.ஏ. கூட்டணி மாபெரும் தோல்வியைச் சந்திக்கும் என்கிறார்கள்.
ஆகவே இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்திக்கப்போகின்ற பாஜகவுடன் நிச்சயம் பல மாநிலக் கட்சிகள் தேர்தல் வெற்றிக்குப் பின் இணைய வாய்ப்பே இல்லை" என்கிறார்












Click it and Unblock the Notifications