தவெக ஆட்சி கலைக்கப்பட்டால் அடுத்து என்ன நடக்கும்? யார் ஆட்சியமைப்பது? எல்லாமே ஆளுநர் கையில்?
சென்னை: தவெக ஆட்சி அமைத்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் அடுத்து என்ன நடக்கும்?
சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 108 இடங்களை வென்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
மே 13 ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்தது தவெக. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகள், தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் அடுத்து என்ன நடக்கும்?
தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தாலோ அல்லது பெரும்பான்மை ஆதரவை இழந்தாலோ முதலமைச்சர் விஜய்யும் அவரது அமைச்சரவையும் பதவி விலக நேரிடும்.
காபந்து முதலமைச்சர் விஜய்
புதிய மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் வரை, பதவி விலகும் முதலமைச்சரை காபந்து முதலமைச்சராக தொடருமாறு ஆளுநர் கேட்டுக்கொள்வார். இந்தக் காலகட்டத்தில் முதலமைச்சர் அன்றாட நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்ய முடியும். புதிய கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது.
ஆளுநர் ஆராய்வார்
ஆட்சி கவிழ்ந்தவுடன் ஆளுநர் தன்னிச்சையாக சட்டமன்றத்தைக் கலைக்க பரிந்துரைக்க முடியாது. முதலில், மாற்று அரசாங்கம் அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆளுநர் ஆராய வேண்டும் என்பதே முக்கியத்துவம் வாய்ந்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு. எனவே, ஆளுநர், வேறு ஆட்சி அமையும் சூழல்களை ஆராய்வார். தவெகவுக்கு அடுத்த நிலையில், அதிக இடங்களைப் பெற்றிருக்கும் கட்சி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.
திமுக + அதிமுக
தற்போதைய நிலைமையில், மாற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. திமுக வசம் 59 இடங்கள், அதிமுக வசம் 41 இடங்கள் மட்டுமே உள்ளன. திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க வேண்டுமானாலும், காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை. எதிரெதிர் துருவங்களான திமுகவும் அதிமுகவும் கைகோர்த்து ஆட்சி அமைப்பது குதிரைக் கொம்புதான்.
மீண்டும் தவெக?
தவெக ஆட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கவிழ்ந்த பிறகும், தவெக-வே மீண்டும், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர முயற்சிக்கலாம். அதிமுகவில் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வந்து மெஜாரிட்டியை நிரூபிக்க முயற்சிக்கலாம்.
எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால்?
எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், ஆளுநரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஆர்டிகிள் 356-ஐ பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவார். மாநில நிர்வாகம் ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் செல்லும். அவருக்கு உதவ ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள்.
குடியரசுத் தலைவர் ஆட்சி
இந்த அரசியல் முடக்கம் நீண்ட காலம் நீடிக்க முடியாது. அரசியலமைப்பு விதிகளின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் 2 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெற்றால், ஒரு முறைக்கு 6 மாதங்கள் வீதம் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க முடியும்.
சட்டமன்றம் முடக்கி வைக்கப்படும் 6 மாத கால அவகாசம், அரசியல் கட்சிகளுக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான களமாக அமையும். தேர்தல் செலவுகளையும் மக்கள் மனநிலையையும் கருத்தில் கொண்டு, இப்போதைக்கு தேர்தலை எதிர்கொள்ள வேண்டாம் எனக் கருதினால் மற்ற கட்சி ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிக்கக்கூடும்.
தேர்தல் கட்டாயம்
6 மாதங்கள் அல்லது 1 வருடத்திற்குப் பிறகும் நிலையான ஆட்சி அமைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி குடியரசுத் தலைவர் சட்டமன்றத்தை நிரந்தரமாகக் கலைப்பார். கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறதோ இல்லையோ, சட்டமன்றம் கலைக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிற்குப் பொதுத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications
