Tamil Nadu lockdown: தமிழகத்தில் இனிமேல் ஊரடங்குக்கு தேவை கிடையாதாம்! ஏன் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தால் லாக்டவுன் போடப்படுமா என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கொரோனா கேஸ்கள் 500 அல்லது அதனை சுற்றியே இருந்தது. ஆனால் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட்டால் கொரோனா மூன்றாவது அலை உருவானது.
இந்த ஓமிக்ரான் வேகமாக பரவியது. இதனால் ஜனவரி மாதம் நாளொன்றுக்கு தமிழகத்தில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. இதனால் கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.

பள்ளி கல்லூரிகள்
பள்ளி , கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளுக்கு செல்வதிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடற்கரைகளுக்கு பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டது. தியேட்டர்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களில் 50 சதவீதம் இருக்கை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா கேஸ்கள்
இதையடுத்து கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் இருவாரங்கள் கழித்து தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டதால் கொரோனா எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்து காட்டுவதாக புகார்கள் எழுந்தன.

தமிழக சுகாதாரத் துறை
ஆனால் இதை தமிழக சுகாதாரத் துறை மறுத்தது. தேர்தலுக்கு முன்னாடி கொரோனா இருக்கு, தேர்தல் வந்தால் கொரோனா போயிடுச்சா என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் 35 நாட்கள் கழித்து நேற்றைய தினம் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500 க்கு கீழ் 480 ஆக இருந்தது. மூன்றாவது அலை மிகவும் வேகமாக உச்சமடைந்து வேகமாக குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

கொரோனா கேஸ்கள்
இரண்டாவது அலையின் போது தினசரி கொரோனா கேஸ்கள் 500லிருந்து 36,184 ஆக உயர 77 நாட்கள் எடுத்துக் கொண்டதாக டேட்டாக்கள் கூறுகின்றன. உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் கேஸ்கள் அதிகரித்து லாக்டவுனோ அல்லது கடும் கட்டுப்பாடுகளோ விதிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் என்ன கூறியுள்ளனர் தெரியுமா?

தமிழகத்தில் ஊரடங்கிற்கு தேவை கிடையாது
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் கொரோனா வைரஸ் பாதித்ததாலோ இல்லை தடுப்பூசி போட்டுக் கொண்டதாலோ மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. மேலும் மாஸ்க், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவை முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் இரு தவணை தடுப்பூசிகளை 72 சதவீதம் பேரும் போட்டுக் கொண்டுள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா ஊரடங்கோ கடும் கட்டுப்பாடுகளோ தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றார் அந்த அதிகாரி.












Click it and Unblock the Notifications