ஒளிவு மறைவே இல்லாமல் ஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளை! ஆன்லைனில் ஆதாரம் இருந்தும் அமைதி காக்கும் தவெக?
சென்னை: ஆம்னி பேருந்துகளில் இனி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மக்களிடை வசூலிப்போம் என சொல்லிவிட்டு பண்டிகை காலம் என வந்தவுடன் அறிவிப்பை வசதியாக மறந்துவிட்டனரா ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு?
தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என நம்பித்தான் மக்கள் அத்தனை பேரும் ஓட்டு போட்டனர். வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், சாலைகளில் அத்தனை கூட்டம்!

விஜய்க்கு ஓட்டு போடுவதற்காகவே வெளிநாடுகளில் இருந்து தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். ஆனால் இத்தனை பேர் கஷ்டப்பட்டு கொடுத்த வெற்றி மெதப்பில் அவர்களுக்கு நன்மையை செய்யவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு உதாரணமாக பல்வேறு விஷயங்கள் இருக்கும் போதிலும் மக்களை பெரிதும் பாதிக்கும் விஷயம் என்னவெனில் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைதான். தவெக அரசு அமைந்ததும் ஒரு அரசு அலுவலகத்தில் கூட லஞ்சமே கேட்பதில்லை என முதல்வர் விஜய் பெருமிதம் கூறுகிறார்.

அதை சிலாகித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு, ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் "தவெக அரசு அமைந்த பிறகு ஆம்னி பேருந்துக்கான பெர்மிட் (Permit) வழங்க ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கப்படுவதில்லை. எனவே, இனிமேல் நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மக்களிடம் வசூலிப்போம்" என அறிவித்திருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு தற்போது வெறும் ஏட்டளவிலேயே உள்ளது என தற்போது தெரியவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்களும் மாணவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக பெங்களூரில் இருந்து கோவைக்கு 650 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம் தற்போது 3000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அது போல் சென்னையில் இருந்து நெல்லைக்கு 750 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இருந்த கட்டணம் தற்போது 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்த கட்டணக் கொள்ளையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்திருந்தார். அவர் தனது அறிக்கையில், "தமிழ்நாட்டில் வரும் 14-ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும், மதுரைக்கு ரூ.4000 வரையிலும், கோவைக்கு ரூ.6154 வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 300 கி.மீக்கும் குறைந்த தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு செல்ல ரூ.3179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விகிதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று வர வேண்டும் என்றால் பேருந்துக்காக ரூ.34 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை விட அதிக தொகையாகும். வரலாறு காணாத கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு இது தான்.
இந்தக் கட்டணக் கொள்ளையை தனியார் ஆம்னி பேருந்துகள் ரகசியமாகக் கூட செய்யவில்லை. இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தவெக அரசு எதுவும் செய்யவில்லை." என்றார்.

எல்லாவற்றுக்கு மேலாக தவெக அரசு பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளை இயக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. இன்னும் அடுத்த மாதங்களில் சரஸ்வதி பூஜை, தசரா பண்டிகை விடுமுறை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக வரும் போது இந்த புதிய அரசு திணறாமல் சுதாரித்துக் கொண்டு மக்களின் வயிற்றில் பாலை வார்க்குமா? இல்லை ஆம்னி பேருந்துகளுக்கு கடிவாளம் போடாமல் மறைமுகமாக ஊக்குவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பெண்களுக்கு இலவசம் என்ற திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது எந்தளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியை எழுப்புகிறது. காசு கொடுத்து போவதற்கே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லையே, அப்படியிருக்கும் போது இலவச பயணம் என்றால் பேருந்துகள் சரிவர இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
