அரசியல் வழி ஓகே? விஜய்யின் அன்பு வழி ஓகேவா? தவெக கவனிக்க தவறுவது என்ன?
சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்ட தவெக தலைவர் விஜய், அரசியல் களத்தில் மிகக் கொடுமையான சம்பவங்கள் பற்றிக்கூட ஒரு மென்மையான விமர்சனத்தையே வைத்து வருகிறார். கட்சித் தொடங்கியது முதல் அதிக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார். அரசியலில் விஜய் கடைப்பிடிக்கும் மென்மையான போக்கு இன்றைக்கு எடுபடுமா?
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கட்சி தொடங்கும்போதே 2026 சட்டமன்றத்தில்தான் போட்டியிடப் போகிறோம் என்ற இலக்கை நிர்ணயித்து அறிக்கையில் தெளிவாக அறிவித்திருந்தார் விஜய். அதற்குப் பின்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டம், உட்கட்டமைப்பை உருவாக்குவது என்று தொடர்ந்து அவரது கட்சி வேலைகள் நடந்து வருகின்றன.

அரசியல் கட்சியின் பெயரை அவர் அறிவித்தது முதல் பெரிய அளவிலான எந்தச் சர்ச்சைகள் குறித்தும் அவர் எந்த அறிக்கையும் வெளியிடுவதில்லை. அதற்கு முன்பும் கூட விஜய் தனது படம் சார்ந்த சர்ச்சைகள் வந்த போதுகூட வாய் திறந்து ஒரு கருத்தையும் சொன்னதில்லை. ஆனால், கட்சி தொடங்கியதற்குப் பிற்பாடு அவரிடம் ஒரு மாற்றத்தை உணர முடிகிறது. அதிகமாகப் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அதாவது எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள், சீமான் பிறந்தநாள், திருமாவளவன் பிறந்தநாள் என எல்லா தலைவர்களுக்கும் ஒரு அன்பு வாழ்த்து வெளியிட்டு தனது அரசியல் கடமையாற்றி வருகிறார்.
அதேபோல் முன்பு எல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு வெளியில் தெரியாமல் மறைமுகமாகப் போய் உதவிகளைச் செய்துவிட்டு வருவார். அல்லது தொலைப்பேசியில் அழைத்து விசயத்தைக் கேட்பார். இப்போது உடனடியாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் பற்றி அனுதாபம் தெரிவிக்க நேரடியாகக் களத்திற்குப் போய் இருக்கிறார் விஜய்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது அனைத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சென்று விசாரித்தல் என இயங்கி வந்த திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற பிறகு அவரது ஆட்சியில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களை நேரில் போய் பார்த்து விசாரிப்பதைத் தவிர்த்து வருகிறார். அது பற்றி ஒரு பட்டியல் போடலாம். இப்போது சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களைக் கூட விசாரிக்க அவர் நேரில் செல்லவில்லை. அந்தளவில் திரைமறைவில் மட்டுமே அதிகம் இருந்த விஜய், கட்சி முதல்முறையாக ஒரு முக்கியமான சம்பவத்தை நேரில் பார்த்து விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். ஆனால், அது பற்றி விஜய் ஆளும் கட்சியைப் பெரிதாக விமர்சிக்கவில்லை. இனிமேல் இப்படி நடக்காமல் அரசு பார்த்து கவனமாகச் செயல்பட வேண்டும் என்ற தொனியில் பேசி இருக்கிறார்.
இதுதான் அவரது அதிகபட்ச கண்டிப்பு. இதற்கு முன்பு குவைத் தீவிபத்திற்கு மனவேதனை அடைந்ததாகச் சொல்லி இருந்தார். அதன்பின்னர் 12 வகுப்புத் தேர்வில் வென்ற பிள்ளைகள், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு வாழ்த்து என வாழ்த்து மழைகளை அள்ளி வழங்கி வருகிறார். 2026இல் சட்டசபைத் தேர்தலில் களம் இறங்குவதற்கு முன்னால் வரும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற தவெக முடிவு சரிதான். அதற்காக 2026 வரை வெளிப்படையாக யாரையும் விமர்சிக்க மாட்டோம் என்ற பாணி அரசியல் நியாயமா என்பது ஒரு கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

இடைத்தேர்தலில் ஏன் போட்டியில்லை என்பது பற்றி தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சில விளக்கங்களை அளித்துள்ளார். "அதாவது 1949இல் தொடங்கப்பட்ட திமுக 1952இல் வந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அதன் பின்பாக 1957இல் அந்தக் கட்சிப் போட்டியிட்டது. அதேபோன்று 2011இல் தொடங்கப்பட்ட நாம் தமிழர் 2016இல்தான் தேர்தலில் போட்டியிட்டது. ஒரு கட்சிக்கான கட்டமைப்பை உண்டாக்கிய பிறகு தேர்தலில் நிற்பதே சரி. கட்டமைப்பு இல்லாமல் வெற்றி என்பது சாத்தியமில்லை" என்று திட்டவட்டமாகப் பேசியிருக்கிறார்.
மேலும் அவர், "இப்போது மாநிலக்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள விசிககூட இயக்கம் தொடங்கி 10 ஆண்டுகள் வரை தேர்தலைப் புறக்கணித்தே வந்தார்கள். அந்தப் பத்தாண்டுகால இடைவெளியில் கட்சியின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இன்று விசிக 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் 2 எம்பிகளையும் விசிக வைத்துள்ளது. ஆக, வெற்றிக்கான வியூகம் முக்கியம். தவெக தொடங்கப்பட்டு வெறும் 4 மாதங்கள்தான் ஆகிறது. இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலே உதாரணம். மக்களை அடைத்து வைத்து பணம் கொடுத்து எப்படி பிரச்சாரம் செய்தார்கள் என்பது தெரியும்? இப்படியான சூழலில் தவெக விக்கிரவாண்டியில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? அதை உணர்ந்துதான் போட்டியிடவில்லை" என்று கூறியுள்ளார்.
இவர் சொல்வதைப்போல திமுக 52 தேர்தலில் நிற்கவில்லைதான். 10 ஆண்டுகள் விசிக தேர்தலைப் புறக்கணித்ததும் கூட உண்மைதான். ஆனால், 1949இல் தொடங்கப்பட்ட திமுக 1957 தேர்தலில் போட்டியிடும் வரை தமிழ்நாட்டையும் காங்கிரஸ் அரசையும் எப்படி ஸ்தம்பிக்க வைத்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 1953இல் திமுக நடத்திய கல்லக்குடி போராட்டம் அதற்கு ஒரு சாட்சி. டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதற்காகச் செய்த போராட்டம் அது. அதேபோல இந்தி எதிர்ப்பில் திமுக காட்டி வேகம் என்ன?
அண்ணாதுரையும் மு.கருணாநிதியும் எத்தனை மேடைகளில் காங்கிரசை பொளந்து கட்டினார்கள் தெரியுமா? தேர்தல் களத்திற்கு வந்த பிறகு திருமாவளவன் பேச்சு எப்படி உள்ளது? அதற்கு முன்பாக தேர்தல் புறக்கணிப்புக் காலங்களில் அவர் அனல் வீச அரசை எப்படி பயங்கரமாக விமர்சித்தார் என்பதை எல்லாம் கூட தவெக கணக்கில் கொள்ள வேண்டும் என்பதுதான் மக்களின் பார்வையாக இருக்கிறது. அன்பான அரசியல் என்பது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கு உதாரணங்கள் இல்லை. இன்று எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்திருக்கும் ராகுல் எந்தளவுக்கு பாஜகவையும் மோடியும் எதிர்த்து வலுவாக நின்று பேசி இருக்கிறார்.

ஆகவே, சினிமா புகழ் என்பது மட்டும் அரசியல் களத்திற்குப் போதாது. அதற்கு உதாரணம் சிரஞ்சீவி. அவரால் முடியாததைத் தம்பி பவன் கல்யாண் முடித்துக் காட்டியதற்குக் காரணம், போராட்ட குணம். அவர் ஆந்திர அரசியலை ஸ்தம்பிக்கச் செய்தார். அமைதியான அரசியல் என்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கு சமீபத்திய சான்று கமல்ஹாசன்.
ஆனால், எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்த சீமான், மிகக்கடுமையான போராட்டங்கள் மூலமும் பேச்சின் மூலமும்தான் இன்று அரசியல் அங்கீகாரம் பெற்றுள்ளார். போராட்டக் குணம் கொண்ட ஒரு கடுமையான தலைவரைத்தான் தமிழ்நாடு எப்போதும் ஆதரித்திருக்கிறது. அதற்குப் பலரும் முன் உதாரணமாகக் காட்டுவது அயன் லேடி ஜெயலலிதா. கருணாநிதியின் தொடக்கக்கால போராட்டக் குணங்கள்தான் திமுகவுக்கு உந்து சக்தியாக இருந்தது. அரசியலில் மென்மையான வழி என்பது மேன்மையைத் தருவதில்லை. அதை தவெக தலைவர் விஜய்யும் எப்படிக் கையாளப் போகிறார் என்பதற்குக் காலம்தான் பதில் தர வேண்டும்.












Click it and Unblock the Notifications