Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்யை வேஸ்டுனு நினைக்கக் கூடாது! 2026ல் ஆட்டத்தையே மாத்தப் போறதே அவர் தானாம்? எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தமிழக அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்த விவாதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திமுகவும், அதிமுகவும் தங்களது வழக்கமான அரசியல் கணக்குகளை வைத்து தேர்தல் களத்தில் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதனா விஜயை ஒரு அரசியல் சக்தியாக பார்க்கவேயில்லை எனவும் கூறி வருகின்றன. உண்மையில் விஜய் 2026 தேர்தலில் கேம் சேஞ்சராக இருப்பார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஒருபுறம், திமுக 5 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியால் கிடைத்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மீண்டும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. மறுபுறம், ஆட்சிக்கு எதிரான மனநிலையை பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்கிவிடலாம் என்ற எண்ணத்தோடு அதிமுக களமிறங்குகிறது.

ஆனால் இந்த இரு பெரிய கட்சிகளின் கணக்குகளுக்கும் வெளியே நிற்கும் ஒரே காரணி விஜய்யின் தவெகதான். அந்தக் கட்சி தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெளிவாக யாருக்கும் தெரியவில்லை என்பதே உண்மை.

vijay tvk Tamil Nadu Assembly election 2026

விஜய் அரசியல்

எம்ஜிஆர் அரசியலில் அடைந்த வெற்றிகளை எடுத்துக்காட்டி, விஜய்யுடன் ஒப்பிடும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் எம்ஜிஆர் திமுகவின் முக்கிய முகமாக இருந்து அரசியல் அனுபவம் பெற்ற பிறகே அதிமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கிய உடனேயே திண்டுக்கல் இடைத்தேர்தல், புதுச்சேரி தேர்தல் போன்றவற்றில் தன்னை நிரூபித்ததோடு, 1977-ல் ஆட்சியையும் பிடித்தார். ஆனால் விஜய் இதுவரை எந்தத் தேர்தல் களத்திலும் நேரடியாக தன்னை நிரூபிக்கவில்லை. அதனால் அவரது அரசியல் பயணம் வெற்றியாகுமா, தோல்வியடையுமா என்பது இப்போதும் புதிராகவே உள்ளது.

தவெக தாக்கம்

இருப்பினும், தவெக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், விஜய் நடத்திய மாநாடுகளும், மக்கள் சந்திப்பு கூட்டங்களும் அரசியல் வட்டாரங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் திரண்ட கூட்டங்கள், குறிப்பாக இளம் தலைமுறையின் ஆதரவு, அவரது அரசியல் செல்வாக்கை அலட்சியப்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு வந்துள்ளது. கரூர் சம்பவம் போன்ற சில எதிர்மறை சூழல்கள் இருந்தபோதும், விஜய்க்கான ஆதரவு பெரிதாக குறைந்ததாக களத்தில் தெரியவில்லை என்பதே பலரின் மதிப்பீடு.

2026 தேர்தல்

கருத்துக்கணிப்புகள் தவெக 10 முதல் 20 சதவீதம் வரை வாக்குகளைப் பெறக்கூடும் எனக் கூறுகின்றன. இந்த வாக்கு சதவீதம் தனித்து வெற்றி பெற போதுமானதாக இல்லாவிட்டாலும், மற்ற கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு வலுவானதாக இருக்க முடியும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் தவெக அதிக வாக்குகளை பெற்றால், சில தொகுதிகளில் வெற்றியின் விளிம்பை தொடும் வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுகவின் கணக்குப்படி, ஆட்சிக்கு எதிரான வாக்குகளை விஜய் பிரிப்பார்; அதனால் தங்களுக்கு சாதகமாக முடியும் என நம்புகிறது.

இளைஞர் வாக்குகள்

அதிமுகவோ, திமுகவுக்கு வழக்கமாக கிடைக்கும் சிறுபான்மை மற்றும் மாற்றம் விரும்பும் வாக்குகளை விஜய் பிரிப்பார்; அதனால் தங்களுக்கு பலன் கிடைக்கும் என கருதுகிறது. இந்த இரண்டு கணக்குகளிலும் ஓரளவு உண்மை இருந்தாலும், இங்குதான் தவெகவை குறைத்து மதிப்பிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனெனில் 18 முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளர்களில் தவெக முதல் தேர்வாக மாறும் வாய்ப்பு அதிகம். இந்த இளம் வாக்காளர்கள் தங்களோடு மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கக்கூடியவர்கள்.

சீமான் பாதிப்பு

விஜய்க்கு வாக்களிக்க நினைக்கும் இளைஞர்கள் அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்கள் உள்ள குடும்பங்களிலும் இருக்கக்கூடும். அதனால் விஜய் வாக்குகள் யாரை அதிகம் பாதிக்கும் என்பதை இப்போது கணிக்க முடியவில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள், வாக்குறுதிகள் போன்ற பாரம்பரிய அரசியல் யுக்திகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் மனநிலையை மாற்றக்கூடும். ஆனால் இளம் வாக்காளர்களில் பெரும் பகுதி இத்தகைய விஷயங்களைப் பொருட்படுத்தாமல், விஜயின் முகத்தை மட்டுமே பார்த்து வாக்களிக்கத் தயாராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திமுக, அதிமுக

இதன் தாக்கம் நாம் தமிழர் கட்சிக்கும் ஏற்படலாம் என்ற கணிப்புகளும் உள்ளன. சீமானுக்கு ஒரு நிலையான வாக்கு வங்கி இருந்தாலும், மாற்றத்தை விரும்பும் புதிய தலைமுறை வாக்காளர்கள் இதுவரை அவருக்கு ஆதரவளித்து வந்தனர். அந்த வாக்குகள் இந்த முறை விஜய்க்கு திரும்பலாம் என்பதால், நாம் தமிழர் கட்சிக்கும் இம்முறை இழப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், 2026 தேர்தலில் விஜய் அரசியல் அலையை உருவாக்குவது உறுதி. அந்த அலையால் விஜயை முதல்வர் ஆவாரா? இல்லையா? என்பது பிறகு பார்க்க வேண்டிய விஷயம். ஆனால் திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தலையெழுத்தை தலைகீழாக மாற்றும் சக்தி தவெகக்கு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+