வடசென்னை மக்களே கவனம்.. பராமரிப்பு பணிகளுக்காக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு தற்காலிகமாக சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நாளை காலை 6 மணி வரை விம்கோ நகர் மெட்ரோ செயல்படாது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையின் பிரதான போக்குவரத்தாக மெட்ரோ ரயில் இருந்து வருகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க பலரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வெறும் 10 ரூபாயிலிருந்து இந்த சேவை தொடங்குவதால் மக்களின் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மக்களின் வசதிக்காக மேலும் சில இடங்களில் சேவையை தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போதுவரை வடசென்னையின் திருவொற்றியூர் தொடங்கி விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் தொடங்கி பரங்கிமலை வரையிலும் மெட்ரோ சேவை செயல்பட்டு வருகிறது. இது தவிர கலங்கரை விளக்கம் தொடங்கி பூந்தமல்லி வரையிலும் (ஆரஞ்சு லைன்), மாதவரம் பால்பண்ணை தொடங்கி சோழிங்கநல்லூர் வரையிலும் (ரெட் லைன்), அதேபோல மாதவரம் பால்பண்ணை தொடங்கி சிறுசேரி சிப்காட் வரையிலும் (பர்பில் லைன்) மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவரை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ அமைக்கப்பட்டதன் மூலம் வடசென்னை மக்கள் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.
வழக்கமாக எண்ணூர்-சென்ட்ரல் வழித்தடத்தில் இயங்கும் புறநகர் ரயில்கள் மிகவும் தாமதமாகவே இயக்கப்படுகின்றன. எனவே வேலைக்கு செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இப்படி இருக்கையில்தான் திருவொற்றியூரில் அமைக்கப்பட்ட விம்கோ நகர் மெட்ரோ, இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நாளை காலை 6 மணி வரை விம்கோ நகர் மெட்ரோ செயல்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. எனவே பயணத்திற்கு திட்டமிடுபவர்கள் இதனை கருத்தில் கொண்டு மாற்று போக்குவரத்தை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications