புகாரளித்த பெண்ணிடம் ஆபாச பேச்சு.. டிஎஸ்பி மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு.. அதிரும் கள்ளக்குறிச்சி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் டிஎஸ்பி கலையரசன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தப் பெண் நேரடியாக குற்றம்சாட்டியுள்ள சூழலில், அது பொய்யான குற்றச்சாட்டு என்று டிஎஸ்பி கலையரசன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அம்மாவட்ட பெண் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பத்மஜா அமைதி காத்து வருகிறார். அதேபோல் தவெக தலைமை அருள் விக்னேஷை கண்டித்ததாக தகவல் வெளியாகியது.

இந்த விவகாரமே இன்னும் நிறைவடையாத சூழலில், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது உறவினரான ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் ராஜேந்திரன் குடும்பத்தினர் அன்னலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், அன்னலட்சுமி இந்த புகார் தொடர்பாக விழுப்புரம் சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளார்.
பின் இந்த வழக்கை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் விசாரிக்க விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக அன்னலட்சுமி கள்ளக்குறிச்சி டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்ற போது, டிஎஸ்பி கலையரசன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அன்னலட்சுமி பேசுகையில், தன்னுடன் வந்த வழக்கறிஞர் மற்றும் மகனை வெளியே அனுப்பிவிட்டு என் செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட டிஎஸ்பி, உனக்கு வயசு 40.. உனது கணவருக்கு வயது 55.. உங்க ரெண்டு பேருக்கு எப்படி பொருத்தம் என அசிங்கமாக பேசி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, அமைச்சர் வன்னியரசு இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்து விட முடியாது.. இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இது தொடர்பாக தமிழக ஆளுநர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாநில மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பதிவு தபால் மூலமாக புகார் அளித்துள்ளேன்.
ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு.. அவர்கள் மனு விசாரிக்கும் போது என்னுடைய அலுவலகத்தில் சக காவலர்கள் பணியில் இருந்தனர்.. அவர்கள் பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளதாக பதில் அளித்தார்.




Click it and Unblock the Notifications
