ஜெயிலில் இருந்து வந்ததுமே வேலையை காட்டிய 'தில் சாந்தி'.. தி.நகருக்கு ஜவுளி வாங்க போனவரின் பணம் காலி
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான தில் சாந்தி மீண்டும் சென்னை திநகரில் இளைஞரிடம் பணம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்ததுமே மீண்டும் கைவரிசை காட்டியவரை தி.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கவனமுடன் வைத்து இருக்கவில்லையென்றால் அவ்வளவுதான். கண்ணிமைக்கும் நேரத்தில் திருட்டு கும்பல்கள் திருடும் சம்பவங்கள் நடந்து விடுகின்றன. போலீசார் இது போன்ற ஜேப்படி திருடர்களை பிடித்து ஜெயிலில் போட்டால் சிலர் திருந்தி வாழ்கிறார்கள். ஆனால், சிலர் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தாலும் திருந்துவது கிடையாது.

'சிறை பறவை' தில் சாந்தி
திரும்ப திரும்ப அதே தவறை செய்து வருகிறார்கள். அப்படியான ஒரு பெண் தான் தில் சாந்தி (வயது 54). திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த இவர், பிரபல கொள்ளைக்காரியாக அறியப்படுகிறார். இவர் மீது 20 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாலும் வெளியே வந்த பிறகு மீண்டும் திருடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். சிறை பறவை என்று சொல்லும் அளவுக்கு இவர் அடிக்கடி ஜெயிலுக்கே சென்று வந்து இருக்கிறார்.
அண்மையில் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன தில் சாந்தி, சென்னை தியாகராய நகரில் மீண்டும் தனது சித்து வேலையை காட்டியிருக்கிறார். தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்ற தில் சாந்தி, அங்கு வந்த ஆவடியை சேர்ந்த ராமு என்ற வாலிபரின் மணிபர்சை திருடியுள்ளார். மணி பர்ஸ் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த ராமு இது குறித்து மாம்பலம் போலீசில் புகாரளித்தார்.
சிசிடிவி கேமரா காட்சியால் சிக்கினார்
காணாமல் போன மணிபர்சில் 3 ஆயிரம் இருந்துள்ளது. ராமு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குறிப்பிட்ட அந்த ஜவுளி கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொள்ளைக்காரி தில் சாந்திதான் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தில் சாந்தியை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்லும் போது மக்கள் தங்கள் உடமைகளை மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் முன்பின் தெரியாதவர்கள் நட்பாக பழகினால் கூட அவர்களை உடனடியாக நம்பி அஜாக்கிரதையாக இருத்தல் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தில் சாந்தி பெயர் வந்தது எப்படி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருமண மண்டபங்கள், பண்டிகை கால கூட்ட நெரிசல்களில் புகுந்து நகைகள், பணத்தை திருடி வந்துள்ளார் வேப்பம்பட்டு தில் சாந்தி. அதிகமாக தி நகர் பகுதிகளில் தான் அதிக கைவரிசை காட்டியுள்ளார். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வரும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பணம் திருடி வந்துள்ளார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகும் இதே வேலையை தான் செய்து வந்துள்ளார்.
பர்ஸ், கைப்பையை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் மீது சென்னை சுற்றுப்புறங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. அப்படித்தான் தி நகரில் இருசக்கர வாகனத்தை துணிச்சலுடன் திருடியிருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தது. இப்படி நகை, பணங்களை துணிச்சலுடன் திருடி வந்ததால் இவருக்கு தில் சாந்தி என்ற பெயர் வந்தது. தில் சாந்தி குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications