குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை..21 ஆண்டுக்கு மாதம் 10 ஆயிரம்.. தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை: குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில், குழந்தைக்கு 21 வயது பூர்த்தியாகும் வரை மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சந்திர ராக்கு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- எனக்கும் ( சந்திர ராக்கு) காசி விஸ்வநாதன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. இதையடுத்து, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முடிவு செய்தோம்.

இதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. ஆனால், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால் நான் மீண்டும் கருத்தரித்தேன். குடும்பத்தின் வறுமை சூழல் காரணமாக குழந்தையை கருவிலேயே கலைக்க அனுமதி வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நானும் எனது கணவரும் முறையிட்டோம்.
அப்போது, கருவை கலைக்க வேண்டாம் எனவும் குழந்தையின் பராமரிப்புக்கு தேவையான உதவிகளை நீதிமன்றம் செய்து தரும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதன்பின்னர் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறேன். எனவே நீதிமன்றம் கூறியபடி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதேபோன்ற வழக்குகளில் இதற்கு முன்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மனுதாரருக்கும் பொருந்தும். எனவே, மனுதாரருக்கு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். ஏற்கனவே மனுதாரருக்கு அரசாணைப்படி 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், மீதமுள்ள இழப்பீட்டு தொகையான ரூ.2.70 லட்சத்தை வழங்க வேண்டும்.
ஐந்தாவது பிறந்த குழந்தை இலவச கல்வி ( அரசு அல்லது தனியார் பள்ளியில்) பெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். மேலும், ஐந்தாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு 21 வயது பூர்த்தி ஆகும் வரை ஆண்டுக்கு தலா ரூ.1.20 லட்சத்தை வழங்க வேண்டும். அதாவது, மாதம் ரூ.10 ஆயிரம் என்ற வீதம் அரசு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications