சித்ரா மீது லவ்.. பணத்தை இறைத்த பரத்வாஜ்.. உள்ளே புகுந்து காசு பார்த்த பிரீத்தி.. கொடூர கொலை!
தொழிலதிபரை கொன்று கடலில் வீசிய பெண் வக்கீல் கைது செய்யப்பட்டார்
சென்னை: ஒரு தொழில் அதிபரை கடத்தி.. கூலிப்படையை வைத்து, துடுப்புக்கட்டையால் அடித்தே கொன்று.. உடலையும் கடலில் வீசி.. இதுவரை தலைமறைவாகவும் இருந்திருக்கிறார் பெண் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா.. அதுவும் அந்த பெண் ஒரு வக்கீல் என்பதுதான் சென்னை மக்களுக்கு ஷாக்!
சென்னை அடையாறை சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ். 50 வயது தொழில் அதிபர் இவர். அடையாறு இந்திராநகர் முதல் அவென்யூவில் வசித்து வந்தார். கல்யாணமாகாதவர்.
கடந்த ஜுன் மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே போன பரத்வாஜ், திரும்ப வீட்டுக்கு வரவே இல்லை. இதனால் பல இடங்களில் அவரது சொந்தக்காரர்கள் தேடியும் கிடைக்கவே இல்லை. இதனால், அடையாறு போலீசில் புகார் தந்தனர். போலீசாரும் புகாரின் அடிப்படையில் பரத்வாஜை தேடி வந்தனர்.

வேலைக்கார பெண்
அத்துடன் விசாரணையும் ஆரம்பமானது. இதில் பரத்வாஜ் வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணிடம் முதல் விசாரணை தொடங்கியது. அப்போதுதான் பல திடுக் தகவல்கள் வெளியாகின. பரத்வாஜ் வீட்டில் சித்ரா என்ற இளம் பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவரை பரத்வாஜுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் சித்ராவை காதலித்துள்ளார்.

சித்ரா
அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று, கொஞ்சம் கொஞ்சமாக 4 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். இதை சாக்காக வைத்து, அந்த பெண்ணிடம் ஜாலியாக இருக்கவும் முயற்சி செய்துள்ளார். ஆனால் விருப்பமில்லாத சித்ராவோ, வேலையை விட்டே நின்றுவிட்டார். அதனால் கொடுத்து உதவிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார் பரத்வாஜ். ஆனால் சித்ரா தரவில்லை என்பதால், இதை எப்படி வாங்குவது என்று வக்கீல் ப்ரீத்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

ப்ரீத்தி
அதற்கு இளம்பெண்ணை பரத்வாஜுடன் சேர்த்து வைப்பதாக வக்கீல் பிரீத்தி சொல்லி உள்ளார். அத்துடன், பரத்வாஜிடம் ரூ.65 லட்சம் வரை கறந்தும்விட்டார். இந்த ப்ரீத்தி அடையாறில்தான் வசித்து வருகிறார். ஆனால் கடைசி வரை அந்த வேலைக்கார பெண்ணை பரத்வாஜுடன் சேர்த்து வைக்கவே இல்லை ப்ரீத்தி. இதனால் அதிர்ச்சி அடைந்தார் பரத்வாஜ். இரு பெண்களும் தத்தமது பங்குக்கு தன்னை ஏமாற்றியதால் விரக்தி அடைந்தார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டார். ப்ரீத்தி தரவில்லை. இதனால் வக்கீலுக்கும், பரத்வாஜ்-க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

நடுக்கடல்
ஆத்திரமான வக்கீல் பிரீத்தி, காசிமேடை சேர்ந்த பிரகாஷ் என்பவரை ஏற்பாடு செய்து பரத்வாஜை தீர்த்து கட்ட முடிவு பண்ணினார். பிரகாஷ் தன்னுடைய 5 கூட்டாளிகளை அழைத்து வந்தார். இதையடுத்து, இந்த கும்பல், பரத்வாஜை காசிமேடு பீச்சில் இருந்து ஒரு படகில் ஏற்றி சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடத்தி சென்றுள்ளது. நடுக்கடலில் வைத்து, துடுப்பு கட்டையாலேயே அவரை அடித்துக்கொன்று, உடலையும் கடலில் வீசியுள்ளது.

தலைமறைவு
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர கொலை சம்பவத்தில் கூலிப்படையை சேர்ந்த பிரகாஷ் 30, சுரேஷ் 40, மனோகர் 45, ராஜா 30, சந்துரு 29, சதீஷ் 30 ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் முக்கிய மூலகாரணமான வக்கீல் பிரீத்தி தலைமறைவாகி விட்டார்.

கைது
இந்நிலையில், இவரை பிடிக்கவே ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி, அடையாறு இந்திரா நகரில் பிரீத்தி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்படி போலீசார் அங்கு சென்று பெண் வக்கீல் பிரீத்தியை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிர்ச்சி
பிரீத்தி ஒரு வக்கீல் மட்டுமல்ல.. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளும் ஆவார். கல்யாணம் ஆகி கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். இப்போது ஒரு பெண் வக்கீலே கொலை சம்பவம் வரை சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications