பாஜகவிற்கு ஆந்திராவில் அற்புதமான வரவேற்பு.. ஆனால் தமிழகத்தில் திமுக- அதிமுக தெறித்து ஓடுவது ஏன்?
சென்னை: ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும் பாஜக உடன் கூட்டணி வைக்க போட்டி போடுகின்றன.. ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவும் சரி, எதிர்க்கட்சியான அதிமுகவும் பாஜகவை கண்டு தெறித்து ஓடுகின்றன.. இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
ஆந்திராவில் 2014க்கு முன்பு வரை இருந்த களமும் 2014க்கு பின்பான களமும் அடியோடு மாறிவிட்டது. 2014க்கு முன்பு மொத்த ஆந்திராவிலும் (தெலுங்கானா உள்பட) காங்கிரஸ் தான் வலிமையான கட்சியாக இருந்தது. அதேபோல் எதிர்க்கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் இருந்தது. தெலுங்கானா மாநிலம் பிரிந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது.

தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி மற்றும் காங்கிரஸ் இடையே போட்டியாக மாறியது. அதேபோல் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் இடையே போட்டியாக மாறியது.. தெலுங்கானா உதயமாகி 10 வருடத்திற்கு பிறகு முதல்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆந்திராவில் இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடக்க போகிறது. அங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.. எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானாவில் பாஜக பலமாகி வரும் நிலையில், ஆந்திராவில் பாஜக பெரிய அளவில் வளரவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாடு அளவிற்கு கூட அங்கு பாஜக பலமாக இல்லை.
எனினும் எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினர் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்துடன், பாஜகவை கூட்டணியில் இணைக்க ஆர்வம் கட்டுகிறார்கள். இதேபோல் ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றாலும், கடந்த 10 வருடங்களாகவே நல்ல உறவில் இருந்து வருகிறது. எந்த மசோதா என்றாலும் முதல் வரிசையில் நின்று வரவேற்பது உள்பட மாநிலங்களவையில் பாஜகவிற்கு தோள் கொடுக்கும் தோழனாக ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இருக்கிறது. இதனால் ஜெகனின் கட்சியும் பாஜகவை கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும் பாஜக உடன் கூட்டணி வைக்க போட்டி போடுகின்றன.. ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவும் சரி, எதிர்க்கட்சியான அதிமுகவும் பாஜகவை கண்டு தெறித்து ஓடுகின்றன. தமிழ்நாட்டில் அண்மை காலம் வரை கூட்டணியில் இருந்த அதிமுக, இரட்டை தலைமை, சின்னம் உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தது.
ஏற்கனவே திமுகவும் பாஜக உடன் கூட்டணியில் பல வருடங்களாக இல்லை. பாஜகவை 2006ல் தொடங்கி, 2019 வரை அதிமுக, திமுக இரண்டுமே சேர்த்துக் கொள்ளவில்லை.. இரண்டு கட்சிகளும் ஒரே குரலில் பாஜக என்பது மதவாத கட்சி என்று விமர்சித்தன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை பிரச்சாரத்தில் பேசும் போது, இனி எந்த காலக்கட்டத்திலும் அதிமுக பாஜக உடன் கூட்டணி வைக்காது என்று கூறியிருந்தார். அதை கடைசி வரை பின்பற்றினார்.. திமுகவும் 1999 முதல் 2004 வரை பாஜக கூட்டணியில் இருந்த நிலையில், அதன்பிறகு சேரவே இல்லை.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினும் சரி, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் சரி,இந்த முறை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை தீர்க்கமாக அறிவித்துள்ளார்கள். திமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து அரசியல் செய்து வருகிறது..
ஆனால் அதிமுகவை பொறுத்தவரை அப்படி இல்லை... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில பாஜகவைத்தான் கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக பக்கத்தில் சேர்க்க அதிமுக விரும்பவில்லை.. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்று அஞ்சி பாஜகவை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்று சொல்வதாகவே இன்று வரை காரணங்கள் சொல்லப்படுகிறது. அதேபோல் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மதவாதம் என்று ஒரே குரலில் பாஜகவை முத்திரை குத்தி ஓடுவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications