அதகளம் செய்த ஆதித்யா எல்1.. இந்திய விண்வெளி துறையில் முக்கிய திருப்புமுனை! இஸ்ரோ பிளாஷ் பேக் 2023
சென்னை: இந்திய விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாகும். சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்தது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஆதித்யா எல் 1 திட்டத்தின் வெற்றி இஸ்ரோவின் பெயரை உலகம் முழுக்க கொண்டு சேர்த்திருக்கிறது.
பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் சூரியன் இருக்கிறது. என்னதான் இவ்வளவு தொலைவில் இருந்தாலும் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு இதன் ஒளி அவசியமாக இருக்கிறது. சிம்பிளாக சொல்வதெனில், மனிதர்கள் காய்கறிகளையும், இறைச்சியையும் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள் செடி, மரத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது. செடி, மரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் வளர்கிறது. இதற்கு சூரிய ஒளி முக்கியம். சூரியன் மிக மிக முக்கியம். எனவே நாம் சூரியனுடன் தொடர்ந்து கனெக்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம்.

ஏன் சூரியன் அவசியம்: ஒளிச்சேர்க்கை எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் மறைமுகமாக சூரியன் பல்வேறு வகையில் நமக்கு உதவிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை சூரியன் இல்லையெனில், நம்முடைய பூமி இந்த சூரிய குடும்பத்தை விட்டு விலகி விண்வெளியில் காணாமல் போய்விடும். இப்படி நடந்தால் உடனடியாக நமது உலகம் அழிந்துபோய்விடும். ஆக இப்படியாக சூரியன் தனக்காக வாழ்வதை விட பூமிக்காகவே அதிகமாக வாழ்ந்து வருகிறது. ஆனால் இப்படி சமத்து பிள்ளையாக இருக்கும் இது, பல நேரங்களில் (சூரிய) குடும்பத்தையே இரண்டாக பிளக்கும் வேலைகளை செய்துவிடுகிறது.
காந்த புயல்: அதாவது குறிப்பிட்ட சில நேரங்களில் சூரியனிலிருந்து காந்த புயல்கள் வெளி வருகின்றன. இந்த புயல் பூமியை தொட்டால் சோலி முடிஞ்ச்! இந்த காந்த புயல்கள் மின்னணு சாதனங்களை முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். இதுமட்டும் கிடையாது, இந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எல்லாம் பூமியை நோக்கி 'தொப்' என விழுந்துவிடும். எங்கு விழுகிறது என்பதை கணிக்கவே முடியாது.
ஆய்வு ஏன்?: ஆக இந்த புயல்களை முன் கூட்டியே கணிக்க உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்க சூரியனுக்கு மிக நெருக்கமாக செயற்கைக்கோளை ஏவி ஆய்வு செய்து வருகிறது. இந்த விஷயத்தில் நமது இஸ்ரோ இந்த ஆண்டுதான் அ, ஆ-வை போட்டு கணக்கை தொடங்கியிருக்கிறது. அதாவது சூரியனை ஆய்வு செய்ய நாம் முதன் முதலில் தற்போதுதான் ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை அனுப்பியிருக்கிறோம். இது சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுகளை தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கான இடம்: ஆதித்யா எல்1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இது தற்போது சூரியனை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. நிலவில் பாட்டி சுட்ட வடை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம், ஆனால் சூரியனை ஆதித்யா எல்1 போட்டோவாக சுட்டது வரலாற்று சாதனை.
ஏற்கெனவே சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி, இஸ்ரோவுக்கான திறமை என்ன என்பதை உலக நாடுகளுக்கு தெளிவாக காட்டிவிட்டது. இதனை தொடர்ந்து ஆதித்யா எல் 1-ன் வெற்றி, சர்வதேச விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனித்த இடத்தை உருவாக்கிவிட்டது என்றால் அது மிகையில்லை.












Click it and Unblock the Notifications