பிரபலங்களுக்கு ப்ராப்ளம்.. தம்பதிகளை பிரித்த 2024! துணையை விட்டு விலகிய திரை பிரபலங்கள்! லிஸ்ட் இதோ!
சென்னை: திரையுலகை பொருத்தவரை 2024 பல மாற்றங்களை தந்திருக்கிறது. பெரும்பாலான படங்கள் மண்ணைக் கவ்விய நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே தமிழ் திரையுலகின் மானத்தை காப்பாற்றி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல ஜோடிகளை பிரித்திருக்கிறது 2024 என்றும் கூறலாம். காதல் தம்பதிகளாக சினிமா உலகில் வலம் வந்த தம்பதியினர் தங்கள் துணையைப் புரிந்த ஆண்டு 2024. ஏஆர் ரகுமான் தொடங்கி ஜெயம் ரவி வரை இந்த ஆண்டில் தங்கள் துணையை பிரிந்த பிரபலங்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்..
2020 ஆம் ஆண்டும் முதல் 2023ஆம் ஆண்டு வரை திரை உலகில் பல முக்கிய பிரபலங்கள் மறைவை சந்தித்தனர். அவர்களில் விவேக், எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலரை குறிப்பிட்டு சொல்லலாம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு விவாகரத்து ஆண்டாக திரையுலகை ஆட்டிப் படைத்தது என்றே சொல்லலாம்.

பல ஆண்டுகளாக எவ்வித பிணக்குமின்றி வாழ்ந்து வந்த திரையுலக காதல் ஜோடிகள் திடீர் திடீரென தாங்கள் பிரிவதாக அறிவித்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்படி இந்த ஆண்டில் யார் யார் பிரிந்தார்கள் என்பது குறித்து பார்க்கலாம்..
தனுஷ் - ஐஸ்வர்யா:
தயாரிப்பாளர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வராகவனின் தம்பி என்று அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நாயகனாக உயர்ந்த தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தம்பதியினர் இருவரும் பிரியப்போவதாக அறிவித்தனர். சமாதான பேச்சுவார்த்தை, நண்பர்களுடன் ஆலோசனை என பல கட்டங்களுக்கு பிறகு இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் 2024 இருவரும் சட்டபூர்வமாக பிரிந்தனர்.
ஜிவி பிரகாஷ்குமார்- சைந்தவி:
இவர்களா இப்படி? என்பது போல் தான் இருந்தது ஜிவி பிரகாஷ் - சைந்தவி தம்பதியினரின் பிரிவு அறிவிப்பு. பள்ளி மாணவியாக இருக்கும்போதே பாட வந்த சைந்தவியை காதலித்த ஜிவி பிரகாஷ் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரது கூட்டணியில் வெளியான பாடல்கள் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு இருந்தது. இருந்த போதும் 2024ல், 11 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தாலும் இசைக்காக இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து சைந்தவி பாடியது குறிப்பிடத்தக்கது.
ஏஆர் ரகுமான் -சாய்ரா பானு:
2024ஆம் ஆண்டில் வெளியான விவாகரத்து அறிவிப்பில் தமிழ் ரசிகர்களை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது ஏஆர் ரகுமான் - சாய்ரா பானு தம்பதியினரின் விவாகரத்து அறிவிப்பு. திருமண பந்தத்தில் இணைந்து முப்பதாவது ஆண்டை எட்டுவோம் என தான் நம்பி இருந்ததாக ஏஆர் ரகுமான் கூறிய நிலையில், நவம்பர் 19ஆம் தேதி தனது கணவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார் சாய்ரா. இதனால் இதயம் உடைந்து போனதாக அறிக்கை வெளியிட்டார் ரகுமான். இந்தியா முழுவதும் உள்ள திரை ரசிகர்கள் இந்த தம்பதியினரின் பிரிவுக்கு வருத்தம் தெரிவித்தனர். விவாகரத்து குறித்து பல கிசுகிசுக்கள் வெளியான நிலையில் தனது கணவர் உலகிலேயே சிறந்த மனிதர், தனது உடல்நல குறைபாடு காரணமாகவே அவரை பிரிவதாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாய்ரா பானு.
ஜெயம் ரவி- ஆர்த்தி:
2024இல் அடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி என்றால் திரை உலகில் சாக்லேட் பாயாக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்தே தோழியாக பழகி பெற்றோர் சம்மதத்துடன் 2029 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக அறிவித்தது தான். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த ஜோடி ஒன்றாகவே கலந்து கொண்ட நிலையில், திடீரென செப்டம்பர் மாதத்தில் தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டார். தனக்குத் தெரியாமலேயே தனது கணவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆர்த்தி குறிப்பிட சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது .ஜெயம் ரவியின் மனைவி மற்றும் மாமியாரின் சில நடவடிக்கைகள் பிடிக்காததால் ஜெயம் ரவி மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக பின்னர் தெரிய வந்தது.
சீனு ராமசாமி - தர்ஷனா:
இந்த நிலையில் கடைசியாக பிரபல இயக்குனரான சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனாவை பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதி திடீரென பிரிவதாக அறிவித்தது. இதேபோல பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும் நடிகருமான மணிகண்டன் அவரது மனைவி நடிகை சோபியாவை பிரிவதாக அறிவித்தார்.
பிற பிரபலங்கள்:
தமிழில் மட்டுமல்ல பாலிவுட்டில் அர்ஜுன் கபூர் - மலைக்கா அரோரா, நடிகை நடாஷா - ஹர்திக் பாண்டியா, உள்ளிட்டோரும் இந்திய அளவில் தங்கள் இணையை பிரிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications