பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. மே 17 இறுதி நாள்
சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் மே 17 ஆகும். தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நகலைப் பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வெளியானது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வெளியிட்டார். இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவீதமும், மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7,92,494 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், மாணவர்கள் 3,73,178 பேரும், மாணவியர்களின் 4,19,316 பேரும் தேர்வெழுதியுள்ளனர். தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது. இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள், தனித் தேர்வர்கள் தேர்வுத் துறை இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை மே 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 17 ஆம் தேதி வரை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து பாடங்களுக்குமான விடைத்தாள் நகல்களைப் பெற கட்டணமாக 275 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நகலைப் பெற்ற பின்னர் மறுமதிப்பீடு மற்றும், மறுகூட்டலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications