கார் வாங்க போறீங்களா? புதிய ஜிஎஸ்டி அடிப்படையில்.. இப்போதே புக் செய்யலாம்.. வந்தது புதிய வசதி!
சென்னை: வாகனங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ், செப்டம்பர் 22 முதல் நீக்கப்பட்டுள்ளதால், பல கார்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே, பல்வேறு வாகன நிறுவனங்கள் புதிய ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ் முன்கூட்டியே வாகனங்களை முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன.
வாகன நிறுவனங்கள் ப்ரீ புக்கிங் அடிப்படையில் புதிய ஜிஎஸ்டி கீழ் இப்போதே வாகனங்களை புக்கிங் செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஜிஎஸ்டி மாற்றத்தால், நாடு முழுவதும் உள்ள வாகன டீலர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே செஸ் வரி செலுத்தி வாகனங்களை கையிருப்பில் வைத்துள்ள டீலர்கள், அந்தத் தொகையை திரும்பப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால், ஆட்டோமொபைல் துறை ஒரு கொண்டாட்டமான தருணமாக அமையாமல், பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்களுக்கான ஜிஎஸ்டி
செஸ் நீக்கப்படுவதற்கு முன்பு வாகனங்களை வாங்கிய டீலர்கள், செப்டம்பர் 22-ஆம் தேதிக்குப் பிறகு அவற்றை விற்றால் கணிசமான இழப்பை சந்திக்க நேரிடும். தற்போதுள்ள வாகன இருப்புக்கு ஏற்கனவே செஸ் செலுத்திவிட்ட நிலையில், இந்தத் தொகையைத் திரும்பப் பெறுவது சாத்தியமற்றதாகத் தோன்றுவதால், வாகன உற்பத்தியாளர்களும், டீலர்களும் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான புதிய ஜிஎஸ்டி விகிதங்கள், செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன. 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், கார், பைக் அல்லது டிராக்டர் வாங்க திட்டமிடுபவர்களுக்கு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
சிறு ரக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான வரி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி, மற்றும் எல்பிஜி கார்களில், 1200 சிசி இன்ஜின் திறன் மற்றும் 4000 மிமீ நீளம் கொண்ட கார்களுக்கு, தற்போது 18% ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும். இது முன்பு 28% ஆக இருந்தது.
வாகனங்களுக்கான புதிய ஜிஎஸ்டி விகிதங்கள்
அதேபோல், 1500 சிசி இன்ஜின் திறன் மற்றும் 4000 மிமீ நீளம் கொண்ட டீசல் கார்களுக்கும் 18% ஜிஎஸ்டி பொருந்தும். இதன் மூலம் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ20, டாடா ஆல்ட்ரோஸ், ஹோண்டா அமேஸ் போன்ற பிரபலமான ஹேட்ச்பேக் மற்றும் காம்பாக்ட் செடான் கார்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
ஒரு சிறிய பெட்ரோல் காரின் பழைய விலை ₹6,45,000 ஆக இருக்கும் நிலையில் (மொத்த வரி ≈29%), புதிய 18% ஜிஎஸ்டிக்குப் பிறகு அதன் விலை ₹5,90,000 ஆக குறையும். இதன் மூலம் ₹55,000 சேமிப்பு (தோராயமாக 8.53% மலிவாக) ஏற்படும்.
இதற்கு மாறாக, ஆடம்பர கார்கள், எஸ்யூவிகள் மற்றும் உயர் ரக மோட்டார் பைக்குகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளன. முன்பு இவை 28% ஜிஎஸ்டி மற்றும் 17-22% இழப்பீட்டு செஸ்ஸுடன் (மொத்தம் 45-50%) இருந்த நிலையில், தற்போது 40% மட்டுமே வசூலிக்கப்படும். இதனால் டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா எக்ஸ்யூவி700 (உயர் ரக மாடல்கள்), அல்லது இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர செடான் கார்களை வாங்குபவர்களுக்கு இது சாதகமாக இருக்கும்.
பெட்ரோல் காரின் ஜிஎஸ்டி
மோட்டார் சைக்கிள்களைப் பொறுத்தவரை, 350சிசி இன்ஜின் திறன் வரையிலான மோட்டார் சைக்கிள்கள் (மொபெட்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் உட்பட) இப்போது 18% ஜிஎஸ்டியுடன் கிடைக்கும். இது முன்பு 28% ஆக இருந்தது. இதன் விளைவாக பெரும்பாலான நடுத்தர மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை குறையும்.
ஆனால், 350சிசி-க்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், ராயல் என்பீல்ட் 650சிசி, ஹார்லி-டேவிட்சன் அல்லது பிரீமியம் கேடிஎம் மாடல்கள் போன்றவற்றுக்கு, தற்போது 40% ஜிஎஸ்டி பொருந்தும். இதனால் பிரீமியம் பைக் ஆர்வலர்கள் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
டிராக்டர்கள் மற்றும் கிராமப்புற வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. டயர்கள், பிரேக்குகள், ரேடியேட்டர்கள் மற்றும் கிளட்சுகள் போன்ற டிராக்டர் பாகங்களுக்கும் இதே வரி பொருந்தும். இது விவசாயிகள் மற்றும் கிராமப்புற வாங்குபவர்களுக்கு பெரிய சலுகையாகும். மூன்று சக்கர வாகனங்களுக்கும் (ஆட்டோக்கள்) ஜிஎஸ்டி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து வாகனங்களான லாரிகள், சரக்கு வாகனங்களுக்கான சேஸ் போன்றவற்றுக்கு, 28% ஆக இருந்த ஜிஎஸ்டி, தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு செலவுகளைக் குறைக்கும்.
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, அவை தொடர்ந்து 5% ஜிஎஸ்டியுடன் கிடைக்கும். ஏத்தர், ஓலா எலக்ட்ரிக், மற்றும் டிவிஎஸ் மின்சார வாகனங்களின் விலைகள் மாறாமல் இருக்கும். ஹைப்ரிட் வாகனங்களைப் பொறுத்தவரை, சிறிய ஹைப்ரிட்களுக்கு (1200சிசி பெட்ரோல், 1500சிசி டீசல், 4000 மிமீக்கு கீழ்) 18% ஜிஎஸ்டி பொருந்தும். பெரிய ஹைப்ரிட்களுக்கு (அதிக இன்ஜின் திறன் அல்லது 4000 மிமீக்கு மேல்) 40% ஜிஎஸ்டி பொருந்தும்.
இருப்பினும், ஹைட்ரஜன் கார்கள் போன்ற எரிபொருள் செல் வாகனங்களுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும். இது தூய்மையான போக்குவரத்துக்கான அரசின் ஊக்கத்தை காட்டுகிறது. முன்பு பெரிய கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டியுடன் கூடுதலாக இழப்பீட்டு செஸ் வசூலிக்கப்பட்டது. இப்போது 40% ஜிஎஸ்டி விகிதம் ஒருங்கிணைந்ததாகும், தனியாக செஸ் சேர்க்கப்படாது.












Click it and Unblock the Notifications