ரீல்ஸ்க்காக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க பிளான் போட்ட இளைஞர்! சென்னை அருகே பரபர சம்பவம்
சென்னை: ரீல்ஸ் மோகத்தில் இளைஞர் ஒருவர் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்ததாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்ற ரயிலில் தண்டவாளத்தில் குறுக்கே மரக்கட்டையை வைத்து இருமுறை ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த நபர் சிக்கியுள்ளார்.
போலீஸ் விசாரணையின் போது ரயில் கவிழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தண்டவாளத்தின் குறுக்கே மரக்கட்டை
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒன்றாகும். இந்த ரயில் கடந்த 1 ஆம் தேதி அன்று சென்னை தாம்பரத்தில் இருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சென்ற போது திடீரென ரயில் நின்றது.
இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் தண்டவாளத்தில் ரயிலை நிறுத்துவதற்கான கட்டை இருந்தது தெரியவந்தது. மரக்கட்டையை யார் வைத்திருந்தனர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கையில் பையுடன் சுற்றிய பாலமுருகன்
இந்த நிலையில் அதே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடந்த 7 ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்தபோது திடீரென ரயில் நின்றது. ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் சிலர் மரக்கட்டையை தண்டவாளத்தில் வைத்து இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். இதில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த நபர் யார் என விசாரித்ததில், திருவாரூரை சேர்ந்த பாலமுருகன் (வயது 25) என்பது தெரியவந்தது. நேற்று அதிகாலையில் போலீசார் அங்கு கண்காணித்துக்கொண்டு இருந்தபோது பாலமுருகன் கையில் பையுடன் அதிகாலை 2 மணியளவில் தனியாக சந்தேகம்படும்படி வந்துக்கொண்டிருந்தார்.
இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவுக்காக
இதையடுத்து விசாரித்ததில் அவர் தான் இந்த செயலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் ரீல்ஸ் மோகத்தில் இவ்வாறு செய்ததாக கூறினார். திருவாரூரை சேர்ந்த அவர் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறாராம்.
தண்டவாளத்தில் இதுபோன்று மரக்கட்டைகளை வைத்தால் அதில் மோதும் ரயில் எவ்வாறு விபத்தில் சிக்குகிறது? எப்படி கவிழ்கிறது? என்பதை 'ரீல்ஸ்' எடுப்பதற்காக இப்படி செய்ததாக குண்டை தூக்கி போட்டார். இதனால் அதிர்ந்துபோன போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இரும்பு கிளிப்புகள்
மேலும் அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். இந்த பையில் ரயில் தண்டவாளங்களில் போடப்படும் இரும்பு கிளிப்புகள் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ரயிலில் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிரை பொருட்படுத்தாமல் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர் ஒருவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications