"கிரிஞ்சு".. இதுவா “ஹியூமானிட்டி”? ஏழைக்கும் தன்மானம் இருக்கு! பணம் கொடுத்து பேமசாகும் யூடியூபர்கள்
சென்னை: தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக யூடியூபர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் நிலையில், எளிதாகவும் விரைவாகவும் சப்ஸ்கிரைபர்களை பெற்று அனைவர் மத்தியிலும் புகழ்பெற வேண்டும் என்பதற்காக ஹியூமானிட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதுதான் தற்போது சிக்கலாவும் மாறி இருக்கிறது.
இணையதள பயன்பாடு அனைத்து தரப்பிலும் அதிகரித்து இருக்கும் நிலையில் யூடியூபை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி இருக்கிறது. இதன் மூலமாக பலருக்கு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது.
சினிமா, சமையல், ஊடகம் உட்பட பல்வேறு துறைகளில் வாய்ப்பு கிடைக்காத பலர் தங்கள் திறமைகளை யூடியூப் சேனல்களை தொடங்கி காட்டி வருகிறார்கள். இதன் மூலமாக அவர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறார்கள்.

யூடியூப் பிரபலங்கள்
இப்படி யூடியூப் மூலம் அறிமுகமாகி சினிமா, தொலைக்காட்சிகளில் பலர் முக்கிய இடங்களுக்கு உயர்ந்து உள்ளார்கள். அதேபோல் உணவு விமர்சனம், சினிமா விமர்சனம், டிராவல் விலாக், நகைச்சுவை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வீடியோக்களை வெளியிட்டு மில்லியன் கணக்கில் சப்ஸ்கிரைபர்களை இவர்கள் பெற்று வருகிறார்கள்.

ஹியூமானிட்டி வீடியோ
ஆனால், இவர்கள் எல்லாம் ஒன்று, 2 சப்ஸ்கிரைபர்களில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது இந்த நிலையை பல ஆண்டுகால உழைப்புக்கு பிறகு அடைந்து உள்ளார்கள். ஆனால், குறுகிய காலத்தில் இவர்களைபோல் மக்கள் மத்தியில் யூடியூபில் பிரபலமாக நினைப்பவர்களில் பலர் தற்போது உத்தியை கையில் எடுத்து இருக்கிறார்கள். அதுதான் ஹியூமானிட்டி.

வன்முறை கருத்துக்கள்
ஹியூமானிட்டி என்றால் மனிதநேயம் என்று பொருள். ஜாதி, மத, இன, மொழி மோதல்கள், கலவரங்கள், கொலை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள், இரு நாட்டு போர்கள், ஏவுகணை தாக்குதல்கள், பயங்கரவாத தாக்குதல்கள் என சமூக வலைதளங்களில் வன்முறையும், எதிர்மறை கருத்துக்களும் நிறைந்து இருக்கின்றன.

எதிர்மறை வீடியோக்கள்
நெகட்டிவான அல்லது 18 வயதுக்கு மேற்பட்டோருக்காக தகவலை பேசினால் வேகமாக மக்களிடம் சென்றடையும் என்ற கருத்து யூடியூபர்களிடம் உள்ளது. எனவே அது சார்ந்த கருத்துக்களை அவர்கள் கடந்த ஆண்டுகளில் பேசி வந்தனர். இதனை கட்டுப்படுத்த, இப்போது நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் வீடியோக்கள், மனித நேயத்தை பரப்பும் வீடியோக்களை யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களே பிரபலப்படுத்துகின்றன.

நோக்கம் என்ன?
எனவே தற்போது ஹியூமானிட்டி என்ற பெயரில் வீடியோக்களை அதிகளவில் வெளியிட தொடங்கி உள்ளார்கள் யூடியூபர்கள். ஜாதி, மத, மொழி, இன பாகுபாடுகள் நிறைந்த இச்சமூகத்தில் மனிதநேயத்தை விதைக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் முக்கியம். ஆனால், இவர்களில் பெரும்பாலானோரின் நோக்கம் அதுவாக இல்லை.

பொருளாதாரமே நோக்கம்
ஹியூமானிட்டி என்ற பெயரை பயன்படுத்தி அதன் மூலம் பிரபலமாகி யூடியூபில் அதிகளவில் பொருளாதாரம் ஈட்டுவதே இவர்களின் நோக்கமாக உள்ளது. இதற்காக சில ஆயிரங்களை இவர்கள் செலவு செய்கிறார்கள். அதாவது சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஏழைக்கு சில நூறுகளையோ அல்லது ஒரு உணவு பொட்டலத்தையோ கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுகிறார்கள்.

பார்வையாளர் எண்ணிக்கை
அல்லது ஏதாவது ஒரு கூலித் தொழிலாளிக்கோ, சிறு குறு தொழில் செய்து வருபவர்களுக்கோ பணம் அல்லது உணவு கொடுத்து ஹியூமானிட்டி என்று பெயர் வைத்து வீடியோ வெளியிடுகிறார்கள். இதை பார்க்கும் மக்கள் மத்தியில் யூடியூபர்களுக்கு நற்பெயர் கிடைப்பதுடன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்க நல்ல பணமும் கிடைக்கிறது.

உதவியா? முதலீடா?
சில நூறுகளை ஏழைகளுக்கு வழங்கி, ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் இவர்கள் பொருள் ஈட்டுகிறார்கள். லவ் டுடே படத்தில் காகத்தின் கழிவு விழுந்த ஒரு சாப்பாட்டை பொட்டலம் போட்டு ஏழைக்கு வழங்கி அதை வீடியோ எடுத்து நற்பெயர் ஈட்டும் வில்லன், கடைசியில் பெண்ணின் வீடியோவை ஆபாச எடிட் செய்து மாட்டிக்கொள்வார்.

குறையும் மதிப்பு
இந்த யூடியூபர்களின் செயல் லவ் டுடே வில்லனைதான் நியாபகப்படுத்துகிறது. பொருளாதார நோக்கத்தில் எடுக்கப்படும் வீடியோக்களுக்கு ஹியூமானிட்டி என்ற உன்னதமான பெயரை பயன்படுத்தி அதன் மதிப்பை குறைக்கும் வேலையை இவர்கள் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

ரகசியமாக வீடியோ
அதேபோல் இவ்வாறு உதவி செய்யும்போது பெரும்பாலும் வீடியோ எடுக்கிறோம் என்பதை உதவி பெறும் நபர்களிடம் இவர்கள் சொல்லாமல் ரகசியமாக செய்கிறார்கள். வீடியோ எடுப்பது தெரிந்தால் தங்களின் தன்மானம் கருதி அதை பெரும்பாலும் தடுக்கவே முயற்சிப்பார்கள். எனவே அநாகரிகமான முறையில் ரகசியமாக வீடியோ எடுக்கிறார்கள்.

இதெல்லாம் ஹியூமானிட்டியா?
அதேபோல் சாலையில் ஒருவர் பைக்கில் ஸ்டாண்ட் எடுக்காமல் செல்வதை சுட்டிக்காட்டி எச்சரிப்பது, அல்லது ஒருவருக்கு அட்ரஸ் சொல்வதையெல்லாம் ஹியூமானிட்டி என்று பெயர் வைத்து போடுகிறார்கள். ரசிகர்களாக மாறிப்போன சப்ஸ்கிரைபர்களும் அதை கொண்டாடி தீர்க்கின்றனர். இவர்கள் இவ்வாறு வழங்கும் பணமும் உணவும், உதவியா? அல்லது முதலீடா? என்ற கேள்வி எழுகிறது.












Click it and Unblock the Notifications