Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய இந்தியத் தேர்தல் களம் டிஜிட்டல் மயமாகிவிட்ட காலத்தில், ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலுக்குத் தேசிய கட்சியான காங்கிரஸ் எந்தளவு தயாராகியுள்ளது என்பதை அலசிப் பார்க்கலாம்.

கட்சி மாறியவர்களுக்கு உடனே 'சீட்டு' என்பது பாஜக தேர்தல் களத்தில் கற்றுத்தந்த சூத்திரம். அதை இந்த முறை தமிழ்நாட்டில் செயல்படுத்திக் காட்டியுள்ளது காங்கிரஸ். இறுதிக்கட்டம் வரை ராமதாஸ் தலைமையில் செயல்பட்டு வந்த ஜி.கே.மணி மகன் தமிழ்க் குமரன், தடாலடியாகக் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில நாட்களில் அவர் பென்னாகரம் தொகுதியில் அவரை களம் காண வைத்துள்ளது காங்கிரஸ்.

Congress

அதைக் காங்கிரஸ் தொண்டர்களே அறிந்திருக்கவில்லை. இவர் கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளராகக் களம் காண்பார் என ஊடகங்கள் கூட ஊகமாகப் பெரிதாக எடுத்துப் பேசவில்லை. 'சைக்கிள் கேப்'பில் காங்கிரஸ் வேட்பாளராகிவிட்டார் தமிழ்க் குமரன். முன்னதாகவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அவருக்குக் கிடைத்த வெற்றி, தேர்தல் பாதைக்கு கிரீன் சிக்னல் போட்டு, வழி அனுப்பி வைத்திருக்கிறது.

முதற்கட்டமாகக் காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் 12 சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கொங்கு வட்டாரத்தில் பெரும்பான்மை சமுகமாக உள்ளவர்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என ஆவேச குரல் எழுப்பி இருந்தார் ஜோதி மணி. தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பே பல மாநாடுகளை நடத்தியது திமுக.

அது இல்லாமல் பிஎல்ஒ மாநாடு எனப் பல வியூகங்களை திமுக வகுத்துச் செயல்பட்டது. இடையே விஜய் வருகையால் இளைஞரணிக்குப் புத்துயிர் கொடுத்தது திமுக. தேர்தலுக்கு முன் எல்லா நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் வெளியானது. தினமும் வானொலி, தொலைக்காட்சி சுறுசுறுப்பாக இயங்கியது திமுக. இப்போது யூடியூப் எங்கும் திமுகவின் விளம்பரங்கள்தான்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு நாளைக்குத் திமுக 2 கோடி ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவு செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டினார். உண்மையில் அதிமுகவைவிட 'இன்ஸ்டா', ஃபேஸ்புக், யூடியூப் முழுக்க திமுகவின் பிரச்சார பாடல், பரப்புரை காணொளிகள் தான் அதிகம் தென்படுகின்றன.

திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதியைவிட அதிக பணக்கார வேட்பாளர் அதிமுகவில்தான் உள்ளார். லால்குடி வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின் சொத்து மதிப்பு ரூ.1,049 கோடி. அவரை அடுத்து விஜய் ரூ.800 கோடி காட்டியுள்ளார். மார்டின் மருமகனும் இந்தப் பணக்கார வேட்பாளர் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். இந்தப் பணக்கார வேட்பாளர்களைவிட, அதிமுகவைவிட திமுக விளம்பரத்தில் முன்னிலையில் உள்ளது.

பணக்கார வேட்பாளர்?

அதிகாரப்பூர்வமாக ஒரு அரசியல் கட்சி தேர்தலுக்காக மொத்தம் எவ்வளவு செலவு செய்கிறது என்பது கண்டுபிடிக்க முடியாத புதிராகவே உள்ளது. ஒருவேட்பாளருக்கு 40 லட்சம் வரை செலவு செய்யும் அதிகாரத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. யானை பசிக்கு சோளக் கதிர்தான் என இதைப் பலரும் குறிப்பிடுகின்றனர்.

ஆயினும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் மூலம் இந்த டிஜிட்டல் இந்தியத் தேர்தல் அரசியலில் ஒரு கட்சி தன் பரப்புரைக்காக 500 முதல் 1000 கோடி வரை செலவழிக்கக்கூடும் என்று கணித்துள்ளனர். இது ஒரு தோராயமான மதிப்பீடுதான். இந்த மதிப்பீடு பற்றி எல்லாம் கவலைகொள்ளாத கட்சி காங்கிரஸ் மட்டுமே. தமிழக தேர்தல் களத்தில் அக்கட்சி இன்னும் பரப்புரையையே தொடங்கவில்லை.

'ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு' மட்டும் கேட்கும் காங்கிரஸ் தேர்தல் களத்தில் உழைப்பில் மட்டும் பங்கு கொடுக்க மறுக்கிறது. இக்கட்சிக்கு என அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனல்கூட இல்லை. அதன் வேட்பாளர்களைப் பிரச்சாரம் ஒருங்கிணைத்து வழங்கும் பணியைச் செய்ய வேண்டும் என்று கூட அக்கட்சியின் தலைமைக்குத் தோன்றவில்லை.

Tamilnadu Congress Committee எனும் பெயரில் ஒரு டம்மியான யூடியூப் உள்ளது. அதில் சில ஏஐ உதவியுடன் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க மிக சுமாரான ரகம். பிரச்சாரமோ படு மோசம். அதில் ஆச்சரியம் என்னவெனில் அதைக்கூட 40 ஆயிரம் 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 'திறமைகளைக் காக்கும் கை' , 'நாட்டை காக்கும் கை' என்ற ரகத்தில் வீடியோக்கள் உள்ளன.

தனித்து களம் காணும் நாதக சமூக ஊடகங்களில் பெரிய செல்வாக்கு செலுத்தி வருகிறது. இந்தியத் தேர்தலில் மோடியை ஒரு தலைவராக முன்வைத்ததே 'சோஷியல் மீடியா பிம்பம்'தான். அதற்கு நேர்மாறாக இந்திய அளவில் உள்ள காங்கிரஸ் தலைமை மட்டும் எக்ஸ் தளத்தில் ஆக்டிவ் ஆக உள்ளது. ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறார்.

TN Congress IT & Social Media Department மற்றும் Tamilnadu Congress Committee ஆகிய காங்கிரசின் எக்ஸ் பக்கங்களில் ஏஐ உதவியுடன் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் தான் அதிகம் காணப்படுகின்றன. சட்டமன்றத் தேர்தல் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. 2021 தொடங்கி 2026 வரை அக்கட்சி ஒரு மாநிலத் தேர்தலுக்கு அதிகபட்சமான உழைப்பாகச் செய்துள்ளது ஏஐ வீடியோ கன்டென்ட் தான். தனிப்பட்ட வகையில், இந்த டிஜிட்டல் யுகத்திற்கு என எந்த முன்னேற்பாடுகளும் அக்கட்சி செய்யவே இல்லை.

அதிகாரத்தில் பங்கு? உழைப்பில்?

அப்படி இருந்தும் தொகுதியைப் பேரம் பேசி பெறுவதில் அதிக வேகம் காட்டி இருக்கிறது. 45 இடங்களை அக்கட்சி முதலில் கோரியது. பின் 28க்கு இறங்கிவந்தது. அதற்குப் பணிந்து திமுகவும் கூடுதல் இடங்களை அளிக்க முன்வந்துள்ளது. வாங்கிய பின்பும் இன்னும் களத்திற்கு வரவில்லை ராகுல். அவரது அமைதி இன்னும் பேரிடியாக உள்ளது கூட்டணி கட்சியினருக்கு.

அதிகாரப்பூர்வமான காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்யவே களத்தில் ஆளில்லாத போது, தவெக விஜய் தன் பரப்புரையில் (ஏப்ரல் 8) 'உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தவெகவுடன் இருக்கவே விரும்பினார்கள். வலுக்கட்டாயமாக ஸ்டாலின் தன் பக்கம் தக்கவைத்துவிட்டார். அது தேர்தல் களத்தில் வாக்களிப்பின்போது எதிரொலிக்கும்' என்று கூறியுள்ளார்.

களத்தில் காங்கிரஸ் எந்தளவுக்கு வலுவானது என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தும். ஒருவகையில் ஆளும் கட்சிக்குச் சவாலானது மட்டுமல்ல இத்தேர்தல், திமுகவைப் பகைத்துக் கொண்ட காங்கிரசின் பலம் என்ன என்பது நிரூபணமாக்க உள்ள தேர்தலும்கூட.

-கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+